ரவுடிகளுக்கு 'குண்டாஸ்' போலீசாருக்கு ஐ.ஜி., உத்தரவு

புதுச்சேரி: ரவுடிகளை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க ஐ.ஜி., அஜித்குமார் சிங்களா போலீசாருக்கு உத்தரவிட்டார்.

புதுச்சேரியில் அண்மையில் பா.ஜ., பிரமுகர் உமாசங்கர் கொலை செய்யப்பட்டார். இது குறித்து பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இண்டியா கூட்டணி கட்சியினரும் மாநில சட்டம் ஒழுங்கு சம்பந்தமாக புகார் அளித்தனர். அதையடுத்து, கவர்னர் கைலாஷ்நாதன், போலீஸ் உயரதிகாரிகளை அழைத்து ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அதன்பேரில், சட்டம் ஒழுங்கு போலீசாரின் அவசர கூட்டம், போலீஸ் தலைமையகத்தில் ஐ.ஜி., அஜித் குமார் சிங்களா தலைமையில் நேற்று நடந்தது. டி.ஐ.ஜி., சத்திய சுந்தரம், சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்.பி., கலைவாணன், அனைத்து எஸ்.பி.,கள், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் குற்றவாளிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பின், ஐ.ஜி., அஜித்குமார் சிங்களா பேசியதாவது:

புதுச்சேரியில் சட்ட ஒழங்கு அமைதியாக இருக்க வேண்டும். அமைதிக்கு யாராவது குந்தகம் விளைவித்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க எந்த தயக்கமும் இருக்க கூடாது. ரவுடிகள் மீது புகார் வந்தால் சமரசம் என்ற பேச்சே இருக்க கூடாது. ரவுடிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் பாரபட்சம் காட்ட கூடாது.

சமூகத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் ரவுடிகள் மீது தொடர் நடவடிக்கை கண்டிப்பாக இருக்க வேண்டும். தொடர் குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகள் மீது குண்டாஸ் போட்டு சிறையில் தள்ளுங்கள்.

சட்டம் ஒழுங்கு பிரச்னை விஷயத்தில் யாருக்காகவும் நடவடிக்கை எடுக்க தயங்க கூடாது. நடவடிக்கை எடுத்துவிட்டு வந்து தகவல் சொல்லுங்கள். ரவுடிகள் விஷயத்தில் காவல் துறை அதிகாரிகள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இவ்வாறு ஐ.ஜி., பேசினார்.

Advertisement