இரும்புத்தாது கடத்தி விற்பனை நால்வருக்கு 3 ஆண்டு சிறை
பெங்களூரு: பெலகேரி துறைமுகத்தில் இருந்து, இரும்புத்தாதுவை கடத்தி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தவர்களுக்கு, சிறை தண்டனையும், அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தது.
வனத்துறையினர் பறிமுதல் செய்திருந்த இரும்புத்தாதுவை, பல்லாரி மாவட்டத்தின், பெலகேரியில் சேகரித்து வைத்திருந்தனர். இதனை திருடி வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, 2016ல் லோக் ஆயுக்தாவில் வழக்கு பதிவானது.
விசாரணை நடத்திய லோக் ஆயுக்தா அதிகாரிகள், சென்னையின் மிங்கோர் ரிசோர்சஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பங்குதாரர்கள் சதக் அப்துல் காதர், அப்துல் ரசாக், சையத் மவுலானா, பல்லாரி, ஹொஸ்பேட்டின் ராஜ்தேவ் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் சுகதேவ் சிங் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இவர்கள் 2009 ஜனவரி முதல் 2010 மே இறுதி வரை இரும்புத்தாதுவை திருடி, ரகசிய இடத்தில் பதுக்கி வைத்தனர். 59.08 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 1,850 டன் இரும்புத்தாதுவை பெலகேரி துறைமுகம் மூலமாக, சீனாவுக்கு ஏற்றுமதி செய்திருந்தனர். இதனால், அரசுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டது.
விசாரணையை முடித்த லோக் ஆயுக்தா, பெங்களூரின் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். நீண்ட விசாரணைக்கு பின், இவர்களின் குற்றம் உறுதியானதால், நால்வருக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை, 89.05 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.