'ஜீரோ டூ ஹீரோ' ஆன யஷ் தயாள்!

பிரீமியர் லீக் போட்டியில் அதிக ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள அணிகளில் ஒன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இதற்கு காரணம், கிரிக்கெட் ஜாம்பவான்களான விராட் கோலி, தென்னாப்பிரிக்க வீரர் ஏ.பி.டி.வில்லியர்ஸ், மேற்கிந்திய வீரர் கிறிஸ் கெயில் போன்ற பலர் இந்த அணியில் இருப்பதே.

பல ஜாம்பவான்கள் இருந்தாலும், இதுவரை நடந்த 17 பிரீமியர் லீக் தொடர்களில் ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத அணி என்ற அவப்பெயரை சுமந்து வருகிறது. இதற்கு காரணம், ஏலத்தின் போது பவுலர்களுக்கு முக்கியத்துவம் அளிக்காதது; கேப்டன்சியில் செய்த தவறுகள்; டாப் ஆர்டரில் கோட்டை விட்டது; மிடில் ஆர்டரில் சொதப்பியது என சொல்லிக்கொண்டே போகலாம்.

துரத்தும் சாபம்



இவை அனைத்தையும் கடந்து ஆர்.சி.பி., அணி போராடி வெற்றி வாய்ப்பை நெருங்கும் போது, ஏதாவது ஒரு அணி முன்னேறி சென்று, பெங்களூரை பின்னுக்கு தள்ளிவிடும்.

இதனாலே, இந்த அணிக்கு அதிர்ஷ்டம் இல்லை; அணியின் மீது சாபம் உள்ளது என பலரும் கூறுகின்றனர். இப்படி, பல காரணங்கள் கூறினாலும், பவுலிங்கில் சொதப்புவதாலே அதிக போட்டிகளில் ஆர்.சி.பி., அணி தோல்வியை தழுவி உள்ளது.

இதன் காரணமாகவே, இந்த சீசனில் பவுலிங்கிற்கு முக்கியத்துவம் அளித்து, யஷ் தயாள், புவனேஸ்வர் குமார், ஹேசுல்வுட், குருணால் பாண்டியா ஆகியோரை அணி நிர்வாகம் ஏலத்தில் எடுத்தது. இப்படி பல பவுலர்கள் இருந்தாலும், இடது கை வேகப்பந்து வீச்சாளரான யஷ் தயாளின் சிறப்பான பந்துவீச்சு ஆர்.சி.பி., அணியை பல போட்டிகளில் வெற்றிக்கு வழிவகுத்து உள்ளது.

'டெத் ஓவர்'



இவர், டெத் ஓவர் எனப்படும் கடைசி ஓவர்களில் ரன்கள் விட்டுத்தராமல், பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை வீழ்த்துவதில் கெட்டிக்காரராக உள்ளார்.

குறிப்பாக, கடந்த 3ம் தேதி, சென்னை - பெங்களூரு அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில், சென்னை அணி வெற்றி பெற, கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், களத்தில் தோனி இருந்த போதும், செட்டில்ட் பேட்ஸ்மேன் ஜடேஜா இருக்கும் போது தைரியமாக பந்து வீசி, 12 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து; 2 ரன்கள் வித்தியாசத்தில் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

இதனால், இவரை தற்போது அனைவரும் பாராட்டி வருகின்றனர். இப்படி பலராலும் பாராட்டப்படும் யஷ் தயாள், பிரீமியர் லீக் போட்டியில், 2023ம் ஆண்டு அறிமுகமான போது, ஒரு மோசமான சாதனையை படைத்தவர் என்று கூறினால், அதை யாராலும் நம்ப முடியாது.

விமர்சனம்



ஆம்... உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் யஷ் தயாள். இவர், 2023ல் முதன் முதலில் குஜாரத் அணிக்காக விளையாடினார். அப்போது, குஜராத் - கொல்கட்டா அணிக்கு இடையேயான போட்டியில், கொல்கட்டா வெற்றி பெற, 6 பந்துகளில் 29 ரன்கள் தேவைப்பட்டன.

இதனால், அனைவரும் குஜராத் அணி வெற்றி பெறும் என நினைத்தனர். ஆனால், அன்று நடந்ததோ வேறு, தயாள் வீசிய அனைத்து பந்துகளையும் சிக்சர்களாக அடித்து, வெறும் ஐந்து பந்துகளில் 30 ரன்கள் அடித்து, மேட்சை முடித்தார் ரிங்கு சிங். அன்று ஒரே இரவில் ரிங்கு சிங்கின் பெயர் கிரிக்கெட் உலகின் மூலை முடுக்குக்கெல்லாம் சென்றது.

அதே சமயம், இவ்வளவு மோசமாக பந்து வீசிய தயாளை நெட்டிசன்கள் வரம்பை மீறி விமர்சித்தனர். இதன் காரணமாக, அவர் அடுத்த ஆண்டு குஜராத் அணியிலிருந்து நீக்கப்பட்டார். ஆனால், அன்று குஜராத் அணி நிர்வாகம் ஒரு விஷயத்தை மறந்துவிட்டது. கிரிக்கெட்டில் முக்கியமான நேரத்தில் அதிகமான ரன்களை விட்டுக்கொடுக்கும் பவுலர்கள், எதிர்காலத்தில் சிறந்த வீரர்களாக வருவர் என்பதை மறந்துவிட்டது.

யுவராஜ் சிங்



உதாரணமாக, 2007 டி 20 உலக கோப்பையின் போது, இந்திய வீரர் யுவராஜ் சிங் இங்கிலாந்து வீரரான ஸ்டூவர்ட் பிராட்டின் பந்துவீச்சில், ஒரே ஓவரில் ஆறு சிக்சர்கள் அடித்து புதிய சாதனை படைத்தார். அப்போது, யுவராஜின் பெயர் உலகெங்கிலும் ஒலித்தது. அதே சமயம், பிற்காலத்தில் ஸ்டூவர்ட் பிராட் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த பவுலராக விளங்கினார் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இதன்பின், அடுத்த சீசனில் ஆர்.சி.பி., நிர்வாகம் இவர் மீது நம்பிக்கை வைத்து, 5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. அணி நிர்வாகம் தன் மீது வைத்த நம்பிக்கையை, சிறிதளவும் களங்கப்படுத்தாமல், வெறி கொண்ட வேங்கை போல பந்து வீச துவங்கினார்.

எதிரில் நிற்கும் பெரிய பேட்ஸ்மேன்களை பற்றி கவலைப்படாமல் பந்துவீசி விக்கெட்டுகளை தட்டி துாக்கினார். இதன் காரணமாக, இவருக்கு டெத் ஓவர்களை போடும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஹீரோவாக மாற்றம்



குறிப்பாக, சென்னை - பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியில், சென்னை வெற்றி பெற கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், களத்தில் தோனி இருந்த போதும், எனக்கென்ன என்பது போல பந்துவீசி தோனியின் விக்கெட்டையை தட்டி துாக்கினார். அப்போது, ஒரு 'செலபிரேஷனில்' ஈடுபட்டாரே, அது உலக அளவில் டிரென்டிங் ஆனது.


அந்த தினம் இவர் வாழ்க்கையில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் வாழ்க்கையிலும் மறக்க முடியாததாக மாறியது. ஏனெனில், வீழ்த்தியது தோனியின் விக்கெட்டை என்பதே. இதுவரை கிரிக்கெட்டில் ஜீரோவாக பார்க்கப்பட்டவர் தோனியின் விக்கெட்டை வீழ்த்தி முதல் முறையாக, தன்னை 'ஹீரோவாக' பிரகடனம் செய்து கொண்டார். அன்று முதல் இன்று வரை டெத் ஓவர்களில் எதிர் அணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாகவே திகழ்கிறார்

- நமது நிருபர் -.

Advertisement