பயங்கரவாத கும்பலை கூண்டோடு ஒழிக்க விவசாயிகள் ஆவேசம்

திருப்பூர்: பாகிஸ்தான் பயங்கரவாத கும்பலை, இந்திய ராணுவம் கூண்டோடு ஒழிக்க வேண்டுமென, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணியின் ஆலோசனை கூட்டம் நேற்று திருப்பூர் அலுவலகத்தில் நடந்தது. மாநில தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் பங்கேற்று பேசினர். தொடர்ந்து, முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னாள் தலைவர் பழனிசாமியின் 9வது நினைவு தினத்தில், அய்யம்பாளையம் நினைவு துாணில் இருந்து, மணிமண்டபம் வரை, வாகன பேரணியாக சென்று, அஞ்சலி செலுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில், கிராமப்புறத்தில் உள்ள தோட்டங்களில், இரவு நேரங்களில் புகுந்து, கொலை செய்து கொள்ளையடிப்பது அதிகரித்துள்ளது. இதுவரை குற்றவாளிகளை கண்டு பிடிக்காத போலீசை, விவசாயிகள் சங்கம் கண்டிக்கிறது.

இத்தகைய படுகொலை யை தடுக்க, ஊர் பொது மக்கள் அடங்கிய ஊர்க்காவல் படை அமைக்க வேண்டும்.

ஆனைமலை - நல்லாறு திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும். விளை பொருட்கள் விலை வீழ்ச்சியடையும் போது, அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.

அப்பாவி இந்திய மக்களை, ஆயுதம் ஏந்தி படுகொலை செய்த பயங்கரவாத கும்பலை, இந்திய ராணுவம் கூண்டோடு ஒழிக்க வேண்டும்.

Advertisement