காஞ்சி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி...93.27 சதவீதம்: 0.99 சதவீதம் கூடுதல் தேர்ச்சி விகிதம்

காஞ்சிபுரம்:பிளஸ் 2 தேர்வில், காஞ்சிபுரம் மாவட்டம் 93.27 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. கடந்தாண்டை காட்டிலும் 0.99 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி சதவீதம் பெற்றுள்ளது. வழக்கம்போல், மாணவர்களை காட்டிலும் மாணவியரே 3.9 சதவீதம் கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளனர்.




தமிழகம் முழுதும், மார்ச்சில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நடந்தன. அதற்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான தேர்வு முடிவுகளை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் நேற்று வெளியிட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 6,532 மாணவர்கள், 7,222 மாணவியர் என, 13,754 பேர் தேர்வெழுதினர். தேர்வெழுதிய மாணவ, மாணவியரில், 12,828 மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, 93.27 சதவீதமாகும்.

கடந்தாண்டு தேர்ச்சி சதவீதம் 92.28ஆக இருந்தது. நடப்பாண்டில் 0.99 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது.

தேர்ச்சி பெற்றோரில், 91.21 சதவீதம் மாணவர்களும், 95.13 சதவீதம் மாணவியர் ஆவர். மாணவர்களை காட்டிலும், மாணவியர் 3.9 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்களின் மொபைல் போன்களுக்கே தேர்வு முடிவுகள் வந்ததால், தனியார் கணினி மையங்களுக்கோ அல்லது பள்ளிகளுக்கோ, வெயிலில் நேரில் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. வீட்டிலேயே முடிவுகளை மாணவ, மாணவியர், பெற்றோர் பார்த்து தெரிந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம், 89.71 ஆக பதிவாகியுள்ளது. மாநில அளவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீத அடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்டம் 31 வது தர வரிசையை பெற்றுள்ளது. கடந்தாண்டு 33 வது இடத்தை பிடித்திருந்தது. இம்முறை, இரண்டு இடங்கள் முன்னேறியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், அரசு பள்ளிகள் 47, நகராட்சி பள்ளிகள் 3, ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் 2 என, மொத்தம் 52 பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 2023 ல் 86.46 சதவீதமாக இருந்தது. இதையடுத்து, கடந்த 2024 ல் 2.32 சதவீதம் கூடுதலாக பெற்று, 88.78 சதவீதம் பெற்றது.

அதைத்தொடர்ந்து, நடப்பாண்டுக்கான தேர்ச்சி முடிவுகள் நேற்று வெளியானதில், 0.93 சதவீதம் கூடுதலாக பெற்று 89.71 சதவீதமாக பதிவாகி உள்ளது. தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக அரசு பள்ளி மாணவ, மாணவியரின் தேர்ச்சி சதவீதம் ஏறுமுகமாக உள்ளது.

கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது :

தேர்ச்சி சதவீதம் கடந்தாண்டு குறைந்தது போல், இந்தாண்டு குறைய கூடாது என, ஆசிரியர்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வந்தோம். கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்த பல பள்ளிகளை தொடர்ந்து கண்காணித்தோம்.

மணிமங்கலம் மாதிரி பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெறும் என்ற நம்பிக்கை இருந்தது. அதேபோல், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. தேர்ச்சி சதவீதமும் இம்முறை அதிகரித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அரசு பள்ளிகளின் தேர்ச்சி மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த பள்ளிகளின் தேர்ச்சி சதவீதமும் இம்முறை அதிகரித்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.



48 நிமிடங்கள் தாமதம்




பிளஸ் 2 பொது தேர்வு முடிவுகள் நேற்று காலை 9:00 மணிக்கு வெளியானது. ஆனால், காஞ்சிபுரத்தில் உள்ள பல மாணவ-- மாணவியரின் மொபைல் போனுக்கு மதிப்பெண் பட்டியலுடன் தேர்வு முடிவுகள் குறித்த எஸ்.எம்.எஸ்., எனப்படும் குறுந்தகவல் 48 நிமிடங்கள் தாமதமாக 9:48 மணிக்கு அனுப்பப்பட்டது.இதனால் மாணவ-மாணவியர் தங்களது தேர்வு முடிவுகளை உடனே அறிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.


25 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி


காஞ்சிபுரம் மாவட்டத்தில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என 107 பள்ளிகள், நடப்பாண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் பங்கேற்றன. பிளஸ் 2 தேர்வு முடிவு நேற்று வெளியான நிலையில், மாவட்ட அளவில், அரசு, தனியார் பள்ளிகள் 25 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்ச்சியை பெற்றுள்ளன. இதில், மணிமங்கலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியும், நாயக்கன்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும் என, இரண்டு அரசு பள்ளிகள் மட்டுமே 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.அரசு, மாநகராட்சி, நகராட்சி, ஆதிதிராவிடர் நலத்துறை என, அரசு சார்பில் 52 பள்ளிகள் செயல்பட்டாலும், வெறும் இரண்டு பள்ளிகள் மட்டுமே, 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது.

Advertisement