அட்டப்பாளையம் காட்டில் கழிவுநீர் கொட்டி அட்டூழியம் வனஉயரினங்களின் வாழ்விடங்கள் கேள்விக்குறி

பொன்னேரி:சோழவரம் ஒன்றியம், அட்டப்பாளையம் கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான, 200 ஏக்கர் பரப்பில், சமூக காடுகள் உள்ளன. இங்கு மா, தைலம், வேம்பு உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் உள்ளன.

மான், மயில் உள்ளிட்ட வன உயிரினங்களும் வாழ்கின்றன. மேற்கண்ட வனப்பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாததால், தனியார் நிறுவனங்களில் கழிவுகள் இங்கு கொண்டு வந்து கொட்டி குவிக்கப்படுகிறது.

சில நாட்களாக, டிராக்டர், லாரிகளில் தனியார் உணவு தயாரிப்பு நிறுவனங்களின் கழிவுநீர் இங்கு கொட்டப்பட்டு வருகிறது.

வன உயிரினங்கள் நீர் ஆதாரமாக உள்ள குட்டைகளில் இவற்றை கொட்டி அட்டூழியம் செய்து வருகின்றனர்.

வனப்பகுதியில் குப்பை குவித்து எரிக்கப்படுவதும், கழிவுநீர் கொட்டி நீர் ஆதாரங்களை வீணாக்குவதும் தொடர்வதால், அங்குள்ள வன உயிரினங்களின் வாழ்விடங்கள் கேள்விக்குறியாகி வருகிறது.

மேலும், காட்டில் உள்ள மரம், செடிகளின் வளர்ச்சி பாதித்து, அவற்றின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் குறைந்து நிலப்பரப்பாக மாறி வருகிறது.

சோழவரம் ஒன்றிய நிர்வாகம், வனம் மற்றும் வருவாய்த் துறையினர், மேற்கண்ட காட்டு பகுதியில் ஆய்வு செய்து, கழிவுநீர் மற்றும் குப்பை கொட்டி மரம் செடிகளின் வளர்ச்சிக்கும், வனஉயிரினங்களின் வாழ்வாதாரத்திற்கும் கேடு விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து சமூக காடுகளை பாதுகாக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Advertisement