நிலக்கடலை சந்தை விலையை விட வேளாண் துறை விலை அதிகம் விவசாயிகள் அதிர்ச்சி
திருப்பூர்:விதை தேவைக்காக சந்தையில் விற்கப்படும் நிலக்கடலை விலையை விட, வேளாண் துறை சார்பில் மானியத்தில் விற்கப்படும் நிலக்கடலை விலை இரு மடங்கு அதிகம் என்பதால், விவசாயிகள் அதிருப்தியும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.
காரீப் பருவத்தில் திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, சேவூர், குன்னத்துார், பெருமாநல்லுார், ஊத்துக்குளி உள்ளிட்ட இடங்களில் மட்டும் மானாவாரி பயிராக, 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களிலும் நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.
தற்போது கோடை மழை பெய்ய துவங்கியுள்ள நிலையில், மானாவாரியாக நிலக்கடலை விதைப்பதற்கு, தங்கள் நிலங்களை தயார்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட துவங்கியுள்ளனர். விதைப்புக்காக, நிலக்கடலை வாங்குவதிலும் விவசாயிகள் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர். வேளாண் துறையில், கிலோ, 123 ரூபாய் என்ற விலையில் விதை நிலக்கடலை வழங்கப்படுகிறது; விவசாயிகளுக்கு, கிலோவுக்கு, 40 ரூபாய் மானியம் போக, 83 ரூபாய் விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது.
நிலக்கடலை சாகுபடி விவசாயிகள் கூறுகையில், 'வெளிச்சந்தையில் கிலோ, 65 ரூபாய்க்கு விதை நிலக்கடலை விற்கப்படுகிறது. ஆனால், வேளாண் துறை சார்பில், அரசு வழங்கும் மானியத்தை கழித்தால் கூட, சந்தை விலையை விட, 20 ரூபாய் கூடுதலாக விலை கொடுத்து நிலக்கடலை வாங்க வேண்டியிருக்கிறது. மானியம் என்ற பெயரில், தனியாரை ஊக்குவிப்பதாகவே இது அமைந்திருக்கிறது. மேலும், மானியம் என்ற பெயரில் முறைகேடுக்கும் இது வழிவகுப்பதாகவே இருக்கிறது,' என்றனர்.
அதே நேரம், விதை நிலக்கடலையை விற்க, வேளாண் துறையினருக்கு, துறை அமைச்சகம் இலக்கும் நிர்ணயித்துள்ளது. சந்தை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால், எப்படி இலக்கை எட்டுவது என, வேளாண் துறையினர் புலம்புகின்றனர். எனவே, இவ்விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.