கெலமங்கலத்தில் எருது விடும் விழா சீறிப்பாய்ந்த 4௦௦ காளைகள்: 20 பேர் காயம்

கெலமங்கலம், மே 9
கெலமங்கலத்தில் நடந்த எருது விடும் விழாவில், 400க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. அவற்றை அடக்க முயன்ற, 20 பேர் காயமடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட் டம், கெலமங்கலம் பட்டாளம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த, 5 ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் வரை நடந்தது. கடந்த, 1975ம் ஆண்டுக்கு முன் வரை, இக்கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு எருது விடும் விழா நடத்தப்பட்டு வந்தது. அதன் பின் ஏதோ காரணத்திற்காக கிராம மக்கள் எருது விடும் விழாவை நிறுத்தி விட்டனர். 50 ஆண்டுக்கு பின், தொட்டேகானப்பள்ளியில் நேற்று எருது விடும் விழா நடந்தது. தளி இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், விழாவை துவக்கி வைத்தார்.

கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, சூளகிரி, ஓசூர், உத்தனப்பள்ளி சுற்றுப்புற பகுதிகள் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் இருந்து, 400 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
விழா திடலில் அவிழ்த்து விடப்பட்ட காளைகளை அடக்கி, அதன் கொம்பில் கட்டப்பட்டிருந்த தடுக்குகளை இளைஞர்கள் எடுத்தனர்.
காளைகளை அடக்க முயன்ற, 20 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு, கெலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சையளிக்கப்பட்டது. 10,000 க்கும் மேற்பட்டோர் திரண்டதால், கெலமங்கலம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Advertisement