கொத்தமல்லி மகசூல் பாதிப்பு; அதிகாரிகள் ஆய்வு தரமற்ற விதையால் வேதனை

உடுமலை; உடுமலை அருகே தரமற்ற விதைகளால், கொத்தமல்லி சாகுபடியில் மகசூல் பாதிக்கப்பட்டது குறித்து, வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர்கள் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

உடுமலை அருகே ஆலாமரத்துார் சுற்றுப்பகுதிகளில், கிணற்றுப்பாசனத்துக்கு பரவலாக, இலை தேவைக்காக கொத்தமல்லி சாகுபடி செய்யப்படுகிறது.

ஒரு கிலோ விதை, 350 ரூபாய்க்கு வாங்கி விதைப்பு செய்தனர். நடப்பு சீசனில், தரமற்ற விதைகள் காரணமாக, கொத்தமல்லி செடிகளில் போதிய இலை பிடிக்காமல், குச்சியாக மாறியது; முளைப்புத்திறன் பிரச்னையால், மகசூலும் பாதிக்கப்பட்டது.

இது குறித்து, குடிமங்கலம் வட்டார தோட்டக்கலைத்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் புகார் தெரிவித்தனர்; விவசாயிகள் புகார் குறித்து 'தினமலர்' நாளிதழிலும், செய்தி வெளியானது.

இதையடுத்து, குடிமங்கலம் வட்டார வேளாண்துறை விதை ஆய்வாளர் (பொ) ஆனந்தன், கோவை வேளாண் பல்கலை.,க்குட்பட்ட பொங்கலுார் வேளாண் அறிவியல் நிலைய இணை பேராசிரியர்கள் சரவணன், துக்கையன், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் செல்வக்குமார் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

அதில், தரமற்ற விதைகள் காரணமாக, முளைப்புத்திறன் பாதிக்கப்பட்டதும், மகசூல் குறைந்ததும் தெரியவந்தது.

அதிகாரிகள் குழுவினர் கூறுகையில், 'கொத்தமல்லி விதைகள் தரமில்லாமல் பாதிப்பு ஏற்பட்டது குறித்து ஆய்வு செய்துள்ளோம். விதை விற்பனை செய்த கடை மற்றும் உற்பத்தி நிறுவனத்தில் அடுத்த கட்ட ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

விவசாயிகள் கூறுகையில், 'திருப்பூர் மாவட்டத்தில் தரமற்ற விதைகளால் பல்வேறு சாகுபடிகளில் தொடர் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. விதைசான்றுத்துறையினர் மாவட்டத்திலுள்ள உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏக்கருக்கு, 7-8 டன் கிடைக்க வேண்டிய மகசூல் தரமற்ற விதையால் பாதியாக குறைந்து விட்டது. இப்பிரச்னை ஒவ்வொரு சீசனிலும் ஏற்பட்டு வருகிறது,' என்றனர்.

Advertisement