இந்தியா-பாக்., மோதல் எதிரொலி: டில்லி விமான நிலையத்தில் 2 நாட்களில் 228 விமானங்கள் ரத்து

1

புதுடில்லி: இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடிப்பதால் டில்லி விமான நிலையத்தில், கடந்த 2 நாட்களில் 228 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.


இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்கள் காரணமாக விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஜம்மு, பஞ்சாப், குஜராத் மற்றும் ராஜஸ்தானில் உள்ள இந்திய நகரங்கள் மீது பாகிஸ்தானின் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டங்கள் மேலும் அதிகரித்தன.


இதன் எதிரொலியாக கடந்த 2 நாட்களில், டில்லி சர்வதேச விமான நிலையத்தில் 228 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், மே 10ம் தேதி வரை அமிர்தசரஸ், பதிண்டா, புஜ், பூந்தர், பிகானேர், சண்டிகர், ஹல்வாரா, ஹிராசா (ராஜ்கோட்), ஜம்மு, ஜாம்நகர், ஜெய்சால்மர், ஜோத்பூர், காங்க்ரா-ககல், காண்ட்லா, கேஷோத், கிஷன்கர், லே, லூதியானா உள்ளிட்ட 24 விமான நிலையங்களை மூடுவதாக அறிவித்துள்ளது.

இண்டிகோ அறிவிப்பு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், ஸ்ரீநகர், ஜம்மு, அமிர்தசரஸ், லே, சண்டிகர், தர்மசாலா, பிகானீர், ஜோத்பூர், கிஷன்கர் மற்றும் ராஜ்கோட்டிற்கு செல்லும் அனைத்து விமானங்களையும் மே 10ம் தேதி நள்ளிரவு வரை நிறுத்தி வைக்கப்படுவதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

Advertisement