ஊறுகாய்க்கு ஜி.எஸ்.டி., குறைக்க வலியுறுத்தல்

சென்னை : 'ஊறுகாய்க்கு ஜி.எஸ்.டி., வரியை குறைக்க, மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்' என, தமிழக அரசை, உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

தமிழகம் உட்பட பல மாநிலங்களில் வசிக்கும் மக்கள், சாப்பாட்டுக்கு ஊறுகாய் பயன்படுத்துகின்றனர். எலுமிச்சை, மாங்காய், பூண்டு, நார்த்தங்காய் மற்றும் பல்வேறு பழங்கள், காய்கறியில் இருந்து ஊறுகாய் தயாரிக்கப்படுகிறது.

பழ வகையில் இருந்து தயாரிக்கப்படும் ஊறுகாயில், 'சோடியம் பென்சோயேட்' அமில அளவை உயர்த்துவதுடன், ஊறுகாய்க்கு ஜி.எஸ்.டி.,யை குறைக்க, மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என, உணவுப்பொருள் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து, தமிழக உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க கவுரவ ஆலோசகர் எஸ்.பி.ஜெயப்பிரகாசம் கூறியதாவது:

தமிழகத்தில் ஊறுகாய் தொழிலில், அமைப்பு ரீதியாக 800 நிறுவனங்கள், அமைப்பு சாராதவையாக 8,000க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். மாதம் சராசரியாக, 50 கோடி ரூபாய்க்கு ஊறுகாய் வியாபாரம் நடக்கிறது. ஊறுகாய் கெட்டுப்போகாமல் இருக்க, சோடியம் பென்சோயேட் அமிலம் பயன்படுத்தப்படுகிறது.

இது, பழ வகையில் இருந்து தயாரிக்கப்படும் ஊறுகாயில், கிலோவுக்கு 250 மி.கி., அளவும், காய்கறி வகையில் இருந்து தயாரிக்கப்படுவதில், 2,000 மி.கி., அளவும் இருக்க விதிகள் உள்ளன. எலுமிச்சை, மாங்காய் ஆகியவை பழ வகையில் இடம் பெறுகின்றன. அவற்றில் இருந்து தயாரிக்கப்படும் ஊறுகாய் தரத்தை பரிசோதிக்கும் போது, 250 மி.கி., மேல் சோடியம் பென்சோயேட் அமிலம் இருந்தால், அதிகாரிகள் அபராதம் விதிக்கின்றனர். அந்த அளவு குறைந்தால், ஊறுகாய் கெட்டு விடும்.

எனவே, பழ வகையில் இருந்து தயாரிக்கப்படும் ஊறுகாயிலும் கிலோவுக்கு, சோடியம் பென்சோயேட் அமில அளவை, சர்வதேச தர விதிக்கு ஏற்ப 1,000 மி.கி.,யாக உயர்த்தி வழங்க, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என, தமிழக வணிக வரித்துறை அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது.

மேலும், ஊறுகாய்க்கு 12 சதவீதமாக உள்ள ஜி.எஸ்.டி., வரியை, 5 சதவீதமாக குறைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement