அண்ணே..அண்ணே..பாடலால் வந்த பிரச்னை..கங்கை அமரனின் கலகலப்பு

அண்ணே..அண்ணே...சிப்பாய் அண்ணே..நம்ம ஊரு நல்ல ஊரு நல்ல ஊரு இப்ப ரொம்ப கெட்டுப்போச்சுண்ணே...என்ற பாடலால் என்னை எம்ஜிஆர்..கூப்பிட்டுவிட்டார்,ஒருவித பதட்டத்துடன் நான் அவர் முன் போய் நின்றேன்..அங்கே என்ன நடந்தது தெரியுமா?என்று கேட்டுவிட்டு சில வினாடிகள் இடைவேளைவிட்டார் கங்கை அமரன்.
அந்த இடைவேளை நேரத்தில் இது என்ன நிகழ்ச்சி என்பதை சொல்லிவிடுகிறேன்
'காலங்களில் அவன் வசந்தம்' என்ற தலைப்பில் கவியரசர் கண்ணதாசன் புகழ்பாடும் நிகழ்ச்சியை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி ஆதரவுடன் இசைக்கவி ரமணன் நுாறு முறை நடத்திவிட்டார்.
கண்ணதாசன் பாட்டுக்கு பாடியவர்கள், இசை அமைத்தவர்கள், படத்தை இயக்கியவர்கள் என்று அவரோடு பயணம் செய்தவர்கள், அவரை போற்றுபவர்கள்,அவரது குடும்பத்தார் என்று பல ஆளுமைகளுடன் நடைபெற்ற இந்த தொடர் நிகழ்ச்சி ரசிகர்களின் பேரதவு பெற்றதாகும்.
ஒரு இடைவேளைக்கு பிறகு தற்போது மீண்டும் தொடர்கிறது.
101 வது நிகழ்ச்சி திநகர் வாணிமகாலில் நடைபெற்றது,இதில் இசைக்கவி ரமணனுடன் இசை அமைப்பாளர் பாடலாசிரியர் இயக்குனரான கங்கை அமரன் கலந்து கொண்டார்.
அவர் கண்ணதாசனுடனான தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் அப்போது தனது வாழ்க்கையில் நடந்த சில சுவராசியமான அனுபவங்களையும் கூறினார் அதில் ஒன்றுதான் எம்ஜிஆருடனான சந்திப்பு.அவர் கூறியதில் இருந்து..
எனக்கு, அண்ணன் இளையராஜாவிற்கு எல்லாம் இசை வந்தது என்றால் அதற்கு முதல் காரணம் அம்மாதான், அண்ணன் தம்பிகள் நாங்கள் அம்மாவை சந்தோஷப்படுத்த ஏதாவது பாட்டுப்பாடிக்கொண்டு இருப்போம், அதற்கு அம்மா 'நீங்கள் சொந்தமாக ஏதாவது பாடுங்கப்பா' என்பார்
நேரு மறைந்த போது ஒரு உருக்கமான பாடலை சொந்தமாக மெட்டுப்போட்டு பாடிக்காட்டினோம் அம்மா பாடலைக்கேட்டு அழுதுவிட்டார் அதுதான் எங்கள் முதல் அங்கீகாரம் கண்ணீரை துடைத்துக்கொண்டு நல்லாயிருக்குப்பா என்றவர்இதுதான் நான் கேட்டது என்று ஆசீர்வாதித்தார் அவரது ஆசீர்வாதம்தான் இப்போது வெளிநாட்டவரும் பாராட்டும் சிம்பொனி வரை கொண்டு வந்துள்ளது.
நான் கவியரசர் கண்ணதாசனிடம் உதவியாளராக விரும்பி சேர்ந்தேன் அவரது உதவியாளராக இருப்பது என்பது அவரைப் பார்த்து அவரது செயல்களை பாடல்களை உள்வாங்குவதுதான்,ஓரு கட்டத்தில் பாடலில் ஏதாவது சரி செய்யவேண்டும் என்று கவியரசரைக் கேட்டால் அமரிடம் கொடுங்கள் அதாவது என்னிடம் கொடுங்கள் சரி செய்துகொடுப்பார் என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்தேன்.
உதாரணத்திற்கு செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என்ற பாடல் வரிகளை கவிஞர் செந்தாழம்பூவில் கொண்டாடும் தென்றல் என்றுதான் எழுதிக் கொடுத்தார் அந்த கொண்டாடும் வார்த்தை சரியாக வராததால் வந்தாடும் என்று மாற்றினேன் சரி அப்படியே வச்சுக்க என்று சொல்லிவிட்டார்.
இப்படி பல பாடல்கள் உண்டு அவரிடம் ட்யூனை சொன்ன மாத்திரத்தில் வரிகளைச் சொல்வார் ஆயிரம் மலர்களே மலருங்கள் என்ற பாடலை வரிகளாகச் சொன்னபோது எங்களுக்கு புரியவில்லை பின் அதைப்பாடலாக மாற்றியபோதுதான் எப்பேர்ப்பட்ட மகான் அவர் என்பது புரிந்தது.
இப்படி அவரது நிழலாகவே வளர்ந்ததால் அவரது தாக்கம் எனக்குள் நிறையவே உண்டு அவர் மறைவிற்கு பிறகு நான் எழுதிய பல பாடல்களில் அவரது தாக்கம் இருந்தது அதை பெருமையாகவே கருதினேன்.
கிராமிய பாணியில் நான் எழுதிய பாடல்கள் பெயரையும் பெற்றுத்தந்தது சிக்கலையும் பெற்றுத்தந்தது அண்ணே அண்ணே பாடலில் வரும் இப்ப நாடு ரொம்ப கெட்டுப்போச்சுண்ணே என்ற வரிகளை பெரிதாகப் போட்டு திமுகவினர் திருச்செந்துார் இடைத்தேர்தலில் பிரச்சார போஸ்டராக போட்டுவிட்டனர்.
இதை அறிந்த அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் என்னைக்கூப்பிட்டுவிட்டார் நானும் அவர் முன் பயம் பதட்டத்துடன் போய் நின்றேன இப்படி ஆட்சிக்கு எதிராக பாடல் எழுதலமா என்று கேட்டார் அண்ணே அந்தப்படத்துல அப்படி ஒரு சச்சுவேஷன் அதாண்ணே என்றேன் நீ தெரிஞ்ச பிள்ளையா போய்ட்டா இனி பார்த்துக்க என்று தோளில் தட்டி அனுப்பினார்.அதன்பிறகு அவருடன் நெருக்கமாய்ப் பழகும் பல சந்தர்ப்பங்கள் கிடைத்தது எல்லாமே மகிழ்ச்சியான சந்தர்ப்பங்களே.
இசைக்கவி ரமணனின் சொல்லாடலையும் கவித்திறமையும் கேட்டுவிட்டு இத்தனை நாளாய் எங்கு இருந்தாய் என்பது போல பாடிவிட்டு முன்பே தெரிந்திருந்தால் பழகியிருந்தால் சினிமாவில் பயன்படுத்தியிருப்பேனே என்று ஆதங்கப்பட்டார்.
பின்னர் நேயர் விருப்பம் போல பார்வையாளர்கள் கேட்ட கவியரசர் பாடல்களை சில வரிகளை இசைக்கவியுடன் பாடி மகிழ்ந்து,மகிழ்வித்தார்.
-எல்.முருகராஜ்