'தட்கல்' முறையில் உள்ள குறைகளை சரிசெய்ய கோரிய மனு தள்ளுபடி

புதுடில்லி: 'தட்கல்' முறையில் பயணியர் எளிதில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஏதுவாக, அதில் உள்ள தொழில்நுட்ப குறைபாடுகளை சரிசெய்யக்கோரிய மனுவை விசாரிக்க, உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் நிறுவனம் பயணியருக்கு ரயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்து வருகிறது. இதில் பயணியர், ஒரு நாள் முன்னதாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய தட்கல் முறை இருந்து வருகிறது.

இடைத்தரகர்கள்



எனினும், இந்த தட்கல் முறையில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாமல் பயணியர் பாதிப்புக்குள்ளாவதாகவும், தொழில்நுட்ப குறைபாடுகளை ஆய்வு செய்து களைய, உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதுதவிர இந்த மனுவில், அங்கீகரிக்கப்படாத ஏஜென்டுகள், இடைத்தரகர்கள் வாயிலாக தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதை தடுக்க, சைபர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த ரயில்வே அதிகாரிகளுக்கு உத்தரவிடும்படியும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமார் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

வழக்கு நிலுவை



அப்போது நீதிபதிகள், 'மனுதாரர், தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறையில் உள்ள சிக்கல்கள் குறித்து மனு தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே, மற்றொரு மனு, தட்கல் டிக்கெட் முன்பதிவு முறையை நீக்கக்கோரி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

'எனவே, உங்களின் மனுவை இங்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த கோரிக்கையை உயர் நீதிமன்றத்தில் முன்வைக்கவும்' எனக்கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

Advertisement