பெண் அதிகாரிகளின் மன உறுதியை குலைக்காதீர்கள்: சுப்ரீம் கோர்ட்
புதுடில்லி: 'நாடு தற்போது இருக்கும் நிலைமையில், குறுகிய கால சேவையில் உள்ள பெண் அதிகாரிகளை ராணுவ பணியில் இருந்து விடுவிப்பது அவர்களின் மனஉறுதியை குலைக்கும். எனவே அவர்களை தற்போது பணியில் இருந்து விடுவிக்க வேண்டாம்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நம் ராணுவத்தின் முப்படைகளிலும் பெண்கள், 10 - 14 ஆண்டுகள் மட்டுமே குறுகிய கால சேவையில் இருக்க முடியும் என்ற விதிமுறை இருந்தது.
இதற்கு எதிராக ராணுவத்தில் பணிபுரியும் பெண் அதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதை விசாரித்த நீதிமன்றம், பெண்களுக்கும் ராணுவத்தில் நிரந்தரப் பணி வழங்க, 2021ல் உத்தரவிட்டது.
ராணுவ பணிக்கான மதிப்பீட்டில், 60 சதவீதம் பூர்த்தி செய்யும் பெண் அதிகாரிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தும் என்றும் தெரிவித்து இருத்தது.
இந்நிலையில், குறுகிய கால சேவையை பூர்த்தி செய்த, 69 பெண் அதிகாரிகள் தங்களை ராணுவத்தின் முழுமையான சேவையில் சேர்த்துக் கொள்ளும்படி கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரணைக்கு வந்தபோது, அடுத்த விசாரணை நடக்கும் வரை, 69 பெண் அதிகாரிகளையும் குறுகிய கால பணியில் இருந்து விடுவிக்க கூடாது என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள் சூர்யகாந்த், கோடீஸ்வர் சிங் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாத்தி வாதிடுகையில், ''இது, ஆயுதப் படையை புத்துணர்வுடன் வைத்திருப்பதற்கான கொள்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நிர்வாக முடிவு. எனவே, இவர்களை பணியில் இருந்து விடுவிக்க தடை விதிக்க வேண்டாம்,'' என, வாதிட்டார்.
மனுதாரர் கீதா சர்மா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மேனகா குருஸ்வாமி வாதிடுகையில், ''பாகிஸ்தான் மீதான தாக்குதல் குறித்து சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய கர்னல் சோபியா குரேஷி இதே போன்ற நிவாரணம் கோரி, அதில் வெற்றியும் பெற்றதை அடுத்து, இன்று நாட்டுக்கே பெருமை சேர்த்துள்ளார்,'' என, குறிப்பிட்டார்.
இதை தொடர்ந்து அமர்வு பிறப்பித்த உத்தரவு:
நாடு தற்போது இருக்கும் சூழலில், பெண் அதிகாரிகளின் மனஉறுதியை நாம் குலைத்துவிடக் கூடாது. அவர்கள் திறமையான அதிகாரிகள். அவர்களின் சேவையை வேறு பணிகளுக்கு நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இந்த நேரத்தில் அவர்களை உச்ச நீதிமன்ற வளாகத்தில் அலைய விடாதீர்கள். நாட்டுக்கு சேவையாற்ற அவர்களுக்கான பணிகள் காத்திருக்கின்றன.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும்
-
எந்த இடையூறும் கூடாது: அன்புமணி அறிவுறுத்தல்
-
துரைமுருகன் 'டிஸ்சார்ஜ்'
-
போராட்டம் தள்ளிவைப்பு ஜவாஹிருல்லா அறிவிப்பு
-
கம்யூ., மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு காயம்
-
கனிம கொள்ளையை எதிர்த்த 13 பேர் 'விபத்தில்' உயிரிழப்பு மா.கம்யூனிஸ்ட் ஆதங்கம்
-
'எதிரிகளால் தாங்கிக்கொள்ள முடியாத 4 ஆண்டு சாதனை': திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்