ரயிலில் பயணித்தவர் தவறி விழுந்து பலி

பண்ருட்டி: பண்ருட்டி அருகே ரயில்வே தண்டவாளம் அருகில் வாலிபர் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மதுரை மாவட்டம், பெருங்குடி கண்ணன் நகரைச் சேர்ந்தவர் மனோவா,30; இவர், நேற்று அதிகாலை தாம்பரம்-நாகர்கோவில் வரை செல்லும் அந்தோதியா ரயிலில் மதுரைக்கு சென்று கொண்டிருந்தார். கடலுார் மாவட்டம், பண்ருட்டி-மேல்பட்டாம்பாக்கம் இடையே ரயில் வந்த போது, படி அருகில் பயணம் செய்து கொண்டிருந்த அவர் திடீரென தவறி கீழே விழுந்தார்.

அப்போது, பின்னால் வந்து கொண்டிருந்த சென்னை-தஞ்சாவூர் உழவன் எக்ஸ்பிரஸ் ரயிலின் லோகோ பைலட், மனோவா அடிப்பட்டு கிடப்பதை பார்த்து ரயிலை நிறுத்தினார். ரயில் பயணிகள், அவரை மீட்டு மேல்பட்டாம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஒப்படைத்து விட்டு 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்தது தெரிந்தது.

இதுகுறித்து கடலுார் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement