ஆற்காடுகுப்பம் அரசு பள்ளியில் பிளஸ் 2வில் 18 சதவிகிதம் தேர்ச்சி குறைவு பெற்றோர் அதிர்ச்சி
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட கனகம்மாசத்திரம், திருவாலங்காடு, ஆற்காடுகுப்பம், அருங்குளம், பூனிமாங்காடு உள்ளிட்ட ஐந்து கிராமங்களில், அரசு மேல்நிலை பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இப்பள்ளிகளில் கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 பயிலும் மாணவ --- மாணவியர் பொதுத்தேர்வு எழுதினர். நேற்று முன்தினம் தேர்வு முடிவுகள் வெளியானது. அதன்படி, ஆற்காடுகுப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி, ஒன்றியத்திலேயே குறைவான தேர்ச்சி சதவீதம் பெற்றுள்ளது.
இப்பள்ளியில், கடந்தாண்டு பிளஸ் 2வில் 85 சதவீதம் தேர்ச்சி அடைந்த நிலையில், தற்போது 67 சதவீத மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால், மாணவர்களின் பெற்றோர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து ஆற்காடுகுப்பத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
ஆற்காடு குப்பம் பள்ளியில் தேர்ச்சி விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதேநிலை தொடர்ந்தால், மாணவர்களை அரசு பள்ளியில் சேர்ப்பதை பெற்றோர் தவிர்த்து விடுவர். ஆற்காடு குப்பம் பள்ளியை சுற்றி கிராமங்களே அதிகம்.
பெரும்பாலான பெற்றோர் ஏழை, எளிய விவசாயிகள், பள்ளியில் தேர்ச்சி விகிதம் குறைவு, மாணவர்கள் ஒழுக்கமின்மை மற்றும் ஆசிரியர்களின் செயல்பாட்டால் அதிருப்தி அடைந்து, பிள்ளைகளை எவ்வாறு இப்பள்ளியில் சேர்ப்பது என, தெரியாமல் தவித்து வருகின்றனர்.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப், இப்பள்ளியின் மீது தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க, கல்வித்துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கிராமங்கள் கடந்தாண்டு நடப்பாண்டு
ஆற்காடுகுப்பம் 85 67
கனகம்மாசத்திரம் 78 82
பூனிமாங்காடு 98 96
அருங்குளம் 94 98
திருவாலங்காடு 89 95