ஒவ்வொருவரையும் உற்று நோக்குவேன்: நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சியினருக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

2


திருச்சி மாவட்ட தி.மு.க.,வில், கிளை செயலர்கள் இருவர் தங்கள் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்தாததை கண்டித்த முதல்வர் ஸ்டாலின், அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த தகவல் வெளியாகி உள்ளது.


திருச்சி மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் திருச்சி சென்றார். அங்கு, 'ரோடு ஷோ' நடத்தி, மக்களை சந்தித்தார். ரோடு ஷோ முழுக்க, சாலையின் இருமருங்கிலும் பெரும் திரளாக கூடி நின்று, பொதுமக்கள் அளித்த உற்சாக வரவேற்பை ஏற்றுக்கொண்ட முதல்வர் ஸ்டாலின், 'இம்முறை திருச்சிக்கு வந்தது, எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்துள்ளது' என கூறியதாக தி.மு.க., நிர்வாகிகள் கூறினர்.

உழைப்பு



பின், திருச்சியில் உள்ள கட்சி அலுவலகமான அறிவாலயம் சென்றவர், அங்கு மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இந்நிகழ்ச்சியில், சட்டசபை தேர்தல் பணிகளுக்கான வழிகாட்டுதல்களை, கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். எந்தெந்த சட்டசபை தொகுதிகளில் தி.மு.க., ஓட்டு வங்கி பலமாக உள்ளது; எங்கு பலவீனமாக உள்ளது என்ற விபரத்தை விளக்கி, புள்ளிவிபரங்களுடன் பேசினார்.


கடந்த 2021 சட்டசபை தேர்தலில் பெற்ற ஓட்டுகளை விட, திருச்சி லோக்சபா தேர்தலில் தி.மு.க., பெற்ற ஓட்டுகள் குறைந்துஉள்ளதை சுட்டிக்காட்டி பேசிய ஸ்டாலின், சட்டசபை தொகுதிகளில் செயல்படாமல் இருக்கும் தி.மு.க., நிர்வாகிகள் பெயரை குறிப்பிட்டு கண்டித்துள்ளார்.


கூட்டத்தில் முதல்வர் பேசியது குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த 2016ல் நடந்த சட்டசபை தேர்தலில், திருச்சி தெற்கு மாவட்டத்தில் அடங்கிய மணப்பாறை, திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதிகளில் தோல்வி அடைந்தோம். ஆனால், 2021 சட்டசபை தேர்தலில், அந்த தொகுதிகள் தி.மு.க., வசமாகின. அதற்கு பல்வேறு தரப்பினரும் உழைத்த உழைப்புதான் காரணம் என்பதை நான் அறிவேன். அதற்காக, இப்போதும் அவர்களை பாராட்டுகிறேன்.


அதற்காக, உங்களுக்கெல்லாம் வழிகாட்டியாக இருந்து களத்தில் பணியாற்றியவர்களுக்கு உறுதுணையாக இருந்து, கட்சித் தொண்டர்கள் ஒவ்வொருவரும் தேர்தல் வெற்றிக்காக தொடர்ந்து பாடுபட வேண்டும். கடந்த 2024 லோக்சபா தேர்தலில், திருச்சி தெற்கு மாவட்டத்தில் அடங்கிய பகுதிகளில், அதிக ஓட்டுகளை பெற்றுள்ளோம். ஆனால், திருச்சி மத்திய மாவட்டத்தில் அடங்கிய பகுதிகளில், தி.மு.க., கூட்டணிக்கு, 8 சதவீதம் ஓட்டுகள் குறைந்துள்ளன.

கட்டாயம்



இந்த விஷயம் தான், இப்போதைக்கு நமக்கு இருக்கும் சவால். வரும் சட்டசபை தேர்தலில், இழந்த ஓட்டுகளைக் காட்டிலும் கூடுதல் ஓட்டுகளை பெற வேண்டிய கட்டாயம், கட்சிக்காரர்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அதேபோல, திருச்சி வடக்கு மாவட்டத்தில் இரண்டு கிளை செயலர்கள், தங்கள் பகுதிகளில் கட்சிக்காக பொதுக்கூட்டம் கூட நடத்தாமல் உள்ளனர். இப்படி இருந்தால், அப்பகுதியில் எப்படி ஓட்டு சதவீதத்தை அதிகரிக்க முடியும்?


எங்கோ இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். திருச்சியில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் நம் செயல்பாடுகள் முதல்வருக்கு எப்படி தெரியப்போகிறது என அலட்சியமாக இருந்தால், நீங்கள் தான் ஏமாந்து போவீர்கள். எந்த மூலையில் இருந்தாலும் சரி, இந்த ஸ்டாலின், கட்சிக்காரர்கள் ஒவ்வொருவரையும் உற்றுநோக்கிக் கொண்டு தான் இருப்பேன். ஒவ்வொருத்தரின் செயல்பாடுகள் குறித்தும், எனக்கு தகவல் வந்து கொண்டே தான் இருக்கும்.


அதனால், யார் கட்சிப் பணி செய்யாவிட்டாலும், அவர்களை விட மாட்டேன். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன். வரும் சட்டசபை தேர்தலில், தமிழகத்தில், ஏழாவது முறையாக தி.மு.க., ஆட்சி அமைக்கத்தான் போகிறது. அதை பெருமையாக சொல்வேன். அதே நேரம், எல்லா விஷயங்களிலும் எச்சரிக்கையோடும், கவனத்தோடும் செயல்பட வேண்டும்.


நம் மீதான அனைத்து பொய் பிரசாரங்களையும் மக்கள் ஏற்கத் தயாரில்லை. நாம் செயல்படுத்தும் ஒவ்வொரு திட்டமும் மக்களை சென்றடைகிறது. பயன் அடையும் மக்கள் மீண்டும் நமக்குத்தான் ஓட்டளிப்பது என்ற தீர்க்கமான முடிவில் உள்ளனர்.

தேடி வரும்



நம் ஆட்சியே தொடர வேண்டும் என விரும்புகின்றனர். இதை நான் கண்கூடாக பார்க்கிறேன். இருந்தபோதும், கட்சிப் பணியில் யாரும் அலட்சியமாக இருக்கக்கூடாது. தேர்தலில் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். திருச்சி மாவட்டத்தில், 100 சதவீதம் வெற்றி நம்மை தேடி வர வேண்டும். அதற்காக ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.


- நமது நிருபர் -

Advertisement