தி.மு.க.,வுக்கு சென்ற கிறிஸ்துவ ஓட்டு; விஜய் பக்கம் திருப்பிவிட முயற்சி

'சட்டசபை தேர்தலில், எந்த அணியை ஆதரிக்க வேண்டும் என கிறிஸ்துவர்களுக்கு, கத்தோலிக்க பிஷப்புகள் அறிவிப்பு செய்யக்கூடாது' என, தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் பாதிரியார்கள் கடிதம் எழுதியுள்ளனர். இதையடுத்து, கிறிஸ்துவர்கள் ஓட்டுகளை வளைக்க, நடிகர் விஜயும், சீமானும் களம் இறங்கி உள்ளனர்.
தேர்தலில், கிறிஸ்துவர்கள் யாரை ஆதரித்து ஓட்டு போட வேண்டும் என்பதை, கத்தோலிக்க பிஷப் உத்தரவின்படி, பாதிரியார்கள் பிரசங்கத்தின் வாயிலாக, சர்ச்சுகளில் சூசகமாக அறிவிப்பர். கிறிஸ்துவர்களின் ஓட்டுகள் மொத்தமாக விழும் என்பதால், அவர்கள் ஆதரவு, தேர்தல் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து வருகிறது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடந்த, அனைத்து தேர்தல்களிலும், தி.மு.க., கூட்டணிக்கே கிறிஸ்துவர்களின் ஓட்டுகள் முழுமையாக கிடைத்து வருகின்றன. தற்போதைய தி.மு.க., ஆட்சியில், சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் பலவும் நிறைவேற்றப்படவில்லை என்ற கோபம் கிறிஸ்துவர்களுக்கு உள்ளது. எனவே, 'மீண்டும் தி.மு.க., அல்லது அ.தி.மு.க., கூட்டணிக்கு, கிறிஸ்துவர்கள் ஓட்டுபோட வேண்டும் என்ற அறிவிப்பை, எந்த பிஷப்பும் வெளியிடக் கூடாது' என, துாத்துக்குடியை சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார் ஒருவர், பிஷப்புகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
வரும் 17ல், தி.மு.க., - எம்.எல்.ஏ., இனிகோ இருதயராஜ் தலைமையிலான கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின், மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடக்க உள்ளது. அதில், தேர்தலில் யாருக்கு ஆதரவு என, முடிவு செய்ய உள்ளனர். இந்த சூழ்நிலையில், தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் பாதிரியார்கள், 'தி.மு.க., கூட்டணியை, ஆதரிக்கும் முடிவை, மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என, குரல் எழுப்பி உள்ளனர்.
நாம் தமிழர் கட்சி சீமான் அல்லது த.வெ.க., தலைவர் விஜயை ஆதரிக்க வேண்டும் என, பிஷப்புகளிடம் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். விஜயின் நெருங்கிய உறவினர், கத்தோலிக்க கிறிஸ்துவர். அவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கிறிஸ்துவ கல்லுாரி பாதிரியார்களுக்கு மிகவும் நெருக்கமானவர். அவரும், அவரது மனைவியும், விஜய் கட்சிக்கு கிறிஸ்துவர்களின் ஓட்டுகளை வளைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில் பிஷப்புகள், பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் கலந்து கொள்ளும் 'வழக்காடுவோம் வாருங்கள்' என்ற நிகழ்ச்சி, சென்னை செம்பாக்கத்தில் 22ம் தேதி நடக்க உள்ளது. அதில் கலந்து கொள்ளும் சீமான், கிறிஸ்துவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்.
- நமது நிருபர் -