யு.ஏ.இ., அணி 'ரிட்டயர்ட் அவுட்': 'டி-20' அரங்கில் சுவாரஸ்யம்

பாங்காக்: 'டி-20' உலக கோப்பை தகுதிச் சுற்றில் யு.ஏ.இ., அணி வீராங்கனைகள் ஒட்டுமொத்தமாக 'ரிட்டயர்ட் அவுட்' ஆகினர்.

இங்கிலாந்தில், அடுத்த ஆண்டு (ஜூன் 12-ஜூலை 5) பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை 10வது சீசன் நடக்கவுள்ளது. மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 8 அணிகள் தகுதி பெற்றன.
மீதமுள்ள 4 இடங்களுக்கு உலக தகுதிச் சுற்று நடக்கவுள்ளது. இதற்கான ஆசிய தகுதிச் சுற்று தாய்லாந்தில் நடக்கிறது. பாங்காக்கில் நடந்த போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,), கத்தார் அணிகள் மோதின. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த யு.ஏ.இ., அணி 16 ஓவரில், 192/0 ரன் எடுத்திருந்தது. கேப்டன் ஈஷா ஓசா (113*), தீர்த்தா சதிஷ் (74*) அவுட்டாகாமல் இருந்தனர். அப்போது மழைக்கான வாய்ப்பு அதிகம் இருந்தது. இப்போட்டியில் வெற்றி பெற விரும்பிய யு.ஏ.இ., அணியினர் மீதமுள்ள 4 ஓவரை விளையாட விரும்பவில்லை. டெஸ்டில் மட்டுமே 'டிக்ளேர்' செய்ய முடியும் என்பதால், ஒவ்வொரு வீராங்கனையாக 'ரிட்டயர்ட் அவுட்' ஆகினர். முதலில் ஈஷா, தீர்த்தா, அதன்பின் இந்துஜா, ஹீனா, வைஷ்ணவி என ஒவ்வொருவராக மைதானத்திற்குள் சென்று 'ரிட்டயர்ட் அவுட்' ஆகி 'பெவிலியன்' திரும்பினர். 'டி-20' அரங்கில் ஒட்டுமொத்தம் அணியும் 'ரிட்டயர்ட் அவுட்' ஆனது முதல் முறையாக அரங்கேறியது.


அதன்பின் களமிறங்கிய கத்தார் அணி, 11.1 ஓவரில் 29 ரன்னுக்கு சுருண்டு, 163 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கத்தார் அணிக்கு ரிஸ்பா பானோ (20) ஆறுதல் தந்தார். ஏழு பேர் 'டக்-அவுட்' ஆகினர்.

Advertisement