இந்தியா - பாக்., போர் நிறுத்தம்: தலைவர்கள் வரவேற்பு

4


புதுடில்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிறுத்தத்திற்கு பல தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா



போர் நிறுத்தத்தை வரவேற்கிறேன். 2 - 3 நாட்களுக்கு முன்பு ஏற்பட்டு இருந்தால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டு இருக்கும். பாகிஸ்தானின் டிஜிஎம்ஓ நமது நாட்டு டிஜிஎம்ஓ.,வை தொடர்பு கொண்டு பேசிய பிறகு அமைதி ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய பணிகளை துவக்கவேண்டியது மாநில அரசின் கடமை. காயமடைந்த மக்களுக்கு அரசின் திட்டங்களின் கீழ் உரிய சிகிச்சை அளிக்கப்படும். மோதல் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. வீடுகளுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து கணக்கெடுக்க அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

முதல்வர் ஸ்டாலின்



இந்திய ஆயுதப்படைகளுக்கு ஆதரவாக தமிழகம் ஆதரவாக பேரணி நடத்தியது. போர் நிறுத்தம் வரவேற்க வேண்டிய ஒன்று. அமைதி நிலவட்டும். நமது எல்லையை தைரியத்துடன் பாதுகாத்த வீரர்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துகள்

முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர்



அமைதி முக்கியமானது. நீண்ட கால போரை இந்தியா விரும்பாதது கண்டு பெருமைப்படுகிறேன். பயங்கரவாதிகளுக்கு பாடம் கற்பிக்கவே இந்தியா விரும்பியது. அந்த பாடம் கற்பிக்கப்பட்டதாக கருதுகிறேன்.

கர்நாடக முதல்வர் சித்தராமையா



இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதி ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொண்டால் நல்ல விஷயம். இருப்பினும் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டாலும், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை தொடர வேண்டும்.

காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி



இந்த விவகாரத்தில் தலையிட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கும் வாழ்த்துகள். இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்பு கொண்டுள்ளன. இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் இரு நாட்டு மக்களும் பாதிக்கப்பட்டனர். இதில் பலர் உயிரிழந்தனர். சொத்துகள் சேதம் அடைந்துள்ளன. பல நாட்களுக்கு பிறகு மக்கள் அமைதியாக தூங்குவார்கள். ராணுவ நடவடிக்கை தீர்வாக அமையாது. அரசியல் தலையீடு தான் எப்போதும் தேவை. நமக்கு மத்தியஸ்தர்கள் யாரும் தேவையில்லை. அனைத்து நாடுகளுக்கும் நமது நாடு தான் பெரியண்ணன் ஆக மாறி தீர்வு காண வேண்டும்.

முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல்



அமைதி ஒப்பந்தத்தை வரவேற்கிறேன். இரு தரப்புக்கும் பாராட்டுகள். இனிமேல் , போருக்கு எந்த தொடர்பும் இல்லாத அப்பாவி மக்கள் இறப்பதை பார்க்க மாட்டோம். பாகிஸ்தான் பயங்கரவாதத்தை நிறுத்துவதுடன், பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்படுவதையும், பயங்கரவாத மையமாக மாறாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். அது தொடரும் வரை மோதல் தொடரும். தற்காலிக போர் நிறுத்தம் ஒரு போதும் தீர்வாகாது.

Advertisement