முதல் தங்கம் வென்றார் மதுரா * உலக கோப்பை வில்வித்தையில் கலக்கல்

ஷாங்காய்: உலக கோப்பை வில்வித்தையில் முதல் தங்கம் வென்றார் இந்தியாவின் மதுரா.
சீனாவின் ஷாங்காய் நகரில் உலக கோப்பை வில்வித்தை ஸ்டேஜ் 2 நடக்கிறது. பெண்களுக்கான காம்பவுண்டு தனிநபர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் மதுரா, துருக்கியின் ஹசல் போருனை 143-141 என வீழ்த்தினார்.
பைனலில் மதுரா, அமெரிக்காவின் கார்சனை சந்தித்தார். முதல் 3 செட் முடிவில் மதுரா 81-85 என பின்தங்கினார். அடுத்த செட்டில் எழுச்சி பெற ஸ்கோர் 110-110 என சமன் ஆனது. 5வது செட்டில் 29-28 என அசத்தினார் மதுரா. முடிவில் மதுரா 139-138 என 'திரில்' வெற்றி பெற்று, உலக கோப்பை வில்வித்தையில் முதல் தங்கம் கைப்பற்றினார். ஜோதிக்குப் பின் உலக கோப்பை அரங்கில் தங்கம் வென்ற இரண்டாவது இந்திய வீராங்கனை ஆனார்.
ஆண்கள் தனிநபர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ரிஷாப் யாதவ், நெதர்லாந்தின் மைக் ஸ்காலசரை எதிர்கொண்டார். இதில் ரிஷாப் 143-149 என தோற்றார். அடுத்து ரிஷாப்-தென் கொரியாவின் கிம் ஜாங்கோ மோதினர். இப்போட்டி 145-145 என சமன் ஆனது. பின் 'ஷூட் ஆப்' முறையில் வெற்றி பெற்ற ரிஷாப், வெண்கல பதக்கம் கைப்பற்றினார்.
ஆண்கள் அபாரம்
காம்பவுண்டு ஆண்கள் அணிகளுக்கான பைனலில் அபிஷேக் வர்மா, ரிஷாப் யாதவ், ஓஜாஸ் பிரவின் இடம் பெற்ற இந்திய அணி, செபாஸ்டியன், லுாயிஸ், ரோட்ரிகோ அடங்கிய மெக்சிகோ அணியை சந்தித்தது. இதில் இந்திய அணி 232-228 என எளிதாக வெற்றி பெற்று தங்கம் கைப்பற்றியது.
பெண்களுக்கான பைனலில் மதுரா, ஜோதி, சிகிதா இடம் பெற்ற இந்திய அணி, 222-234 என மெக்சிகோவிடம் தோற்க, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. கலப்பு அணிகளுக்கான போட்டியில் இந்தியாவின் மதுரா, அபிஷேக் ஜோடி, 144-142 என மலேசியாவின் ஜுவைதி, நுார்படேஹா ஜோடியை வென்று, வெண்கலம் வசப்படுத்தியது.
இதுவரை இந்தியா 2 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என 5 பதக்கம் கைப்பற்றியுள்ளது.

Advertisement