சிக்னல்கள் இல்லாத நெல்லை

திருநெல்வேலியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வண்ணார்பேட்டை, மேலப்பாளையம் பைபாஸ் சந்திப்பு, பாளை பஸ் ஸ்டாண்ட் அருகில், கொக்கிரகுளம் கலெக்டர் அலுவலகம் திருப்பம், ஜங்ஷன் திருவள்ளுவர் மேம்பாலம் துவங்கும் பகுதியில் சிக்னல்கள் இருந்தன.

சாலை விரிவாக்க பணிகளால், இந்த ஐந்து சிக்னல்களும் தற்போது அகற்றப்பட்டு விட்டன. அப்பகுதிகளில், ரவுண்டானா அமைக்கப்பட்டு விட்டதால் போக்குவரத்து போலீசார் அங்கு பணியில் இருப்பதில்லை. இதனால், வாகன வேகத்தை குறைக்காமல் விபத்து ஏற்படும் வகையில் செல்வது தொடர்கிறது. இனி, ரவுண்டானாக்களில் சிக்னல்கள் வராதா? போக்குவரத்து போலீசாரை பார்க்கவே முடியாதா? என, வாகன ஓட்டிகளுக்கு சந்தேகங்கள் எழுகின்றன.

துணை கமிஷனர் வினோத் கூறியதாவது:

ரோடுகள் விரிவாக்கத்தால் தற்போது ஐந்து சிக்னல்களும் அகற்றப்பட்டு ரவுண்டானாக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அந்த பணி இன்னும் நிறைவடையவில்லை. நிச்சயம் அங்கு சிக்னல்கள் ஏற்படுத்தப்படும். தற்போது மதுரை சித்திரை திருவிழா உள்ளிட்ட வெளியூர் பாதுகாப்பு பணிகளுக்கு போக்குவரத்து போலீசார் சென்றிருப்பதால், ரவுண்டானாக்களில் போலீசார் இல்லாமல் இருக்கலாம். இனி அங்கு போக்குவரத்து போலீசார் பணியில் இருப்பர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement