கோவை மாற்றுத்திறனாளி மாணவர்களை கைதட்டி பாராட்டுவோம்!: பிளஸ் 2 தேர்வில் 98.09 சதவீத தேர்ச்சி

கோவை: ஆசிரியர்களின் பல்வேறு சீரிய முயற்சிகளாலும், பயிற்சிகளாலும் கோவை மாவட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள், பிளஸ் 2 தேர்வில் கடினமாக உழைத்து, கடந்த ஆண்டுகளை விட இந்தாண்டு அதிக தேர்ச்சி விகிதத்தை அடைந்து, பாராட்டுதல்களை அள்ளி வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில், 128 மையங்களில் நடந்த பிளஸ் 2 தேர்வில், 112 மாணவர்கள் மற்றும் 150 மாணவிகள் என மொத்தம், 262 மாற்றுத்திறனாளி மாணவர்கள் பங்கேற்றனர்.

இவர்களில், 110 மாணவர்கள் மற்றும் 147 மாணவிகள் என மொத்தம், 257 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 98.09 சதவீத தேர்ச்சி விகிதமாகும்.

அவர்களுக்கு வழங்கப்பட்ட கற்றல் முறைகள் குறித்து, உள்ளடக்கிய கல்வி திட்டஅதிகாரிகள் கூறியதாவது:

மாற்றுத்திறனாளி மாணவர்களின், திறன் அடிப்படையில் பிரித்து பயிற்சிகள் வழங்கப்பட்டன.

உள்ளடக்கிய கல்வி முறையில், பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் பகல் நேர மையங்களில் பயிலும் மாணவர்களுக்காக, 79 சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆசிரியர்கள், மாணவர்கள் பயிலும் பள்ளிகளுக்குச் சென்று அவர்களின் சூழ்நிலையை ஆராய்ந்தனர். பின்னர் மாணவர்களின் வசிப்பிடங்களிலும் சென்று, படிப்பில் உள்ள இடையூறுகள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்களை அறிந்தனர். வகுப்பு ஆசிரியர்களுடன் கலந்தாலோசித்து, கற்பித்தல் ஆலோசனைகள் வழங்கினர்.

15 வட்டார மையங்களில், சிறப்பு ஆசிரியர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மாணவர்களின் தேர்ச்சிக்காக, அதிக கவனம் செலுத்தினர்.

அதுமட்டுமல்லாமல், தற்போது தேர்ச்சிக்கு பிறகு மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டுதலும் வழங்கப்படுகிறது.

டி.என்.பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் ஆபரேட்டர் உள்ளிட்ட, வேலைவாய்ப்புகளுக்கான பயிற்சியிலும், சிறப்பு ஆசிரியர்கள் பங்களித்து வருகின்றனர்.

இவ்வாறு, அவர்கள்கூறினர்.

ஆசிரியர்கள், மாற்றுத்திறன் மாணவர்களின் இந்த சிறந்த சாதனையை, அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement