ரூ.2.55 லட்சம் புகையிலை பொருட்கள் கடத்திய சரக்கு வாகன டிரைவர் கைது
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டவுன் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார், ஓசூர் இன்னர் ரிங்ரோட்டில் உள்ள சீத்தாராம்மேடு அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் அருகே, நேற்று வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த தோஸ்த் சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது, பொருட்கள் ஏற்றும் பகுதியில் ரகசிய அறை போல் அமைத்திருப்பது தெரிந்தது. அதனால் போலீசார் வாகனத்தில் ஏறி அதை திறந்து பார்த்த போது, 255 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் 50 கர்நாடகா மதுபான பாக்கெட்டுகள் இருப்பது தெரிந்தது.
இதனால் வாகனத்தை ஓட்டி வந்த, துாத்துக்குடி மாவட்டம், குள்ளேயன் கரைசல் பகுதியை சேர்ந்த டிரைவர் சொர்ணலிங்கம்,30, என்பவரிடம் விசாரித்த போது, கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து, சென்னைக்கு புகையிலை பொருட்களை கடத்தி செல்வது தெரிந்தது. இதனால், வாகனத்துடன் மதுபானம் மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், டிரைவர் சொர்ணலிங்கத்தை கைது செய்தனர்.