பாக்., குற்றச்சாட்டுக்கு தலிபான் மறுப்பு

காபூல்: ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் இந்தியா ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டிய நிலையில், ஆப்கன் அரசு இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

நம் அண்டை நாடான பாகிஸ்தானுடன் போர் பதற்றம் அதிகரித்த நிலையில், எல்லையோர பகுதிகளில் இருதரப்பினரும் தாக்குதல் நடத்தினர். இந்நிலையில், ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில், இந்தியா ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியது.

இதற்கு ஆப்கன் தலிபான் அரசின் ராணுவ அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஹரியத் ரேடியோவில் அந்நாட்டின் ராணுவ அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் இனயதுல்லா காவாரிஸ்மி கூறுகையில், “எங்கள் நாட்டின் எல்லைக்குள் இந்தியா ஏவுகணை வீசியதாக பாகிஸ்தான் தெரிவிக்கும் கருத்தில் உண்மை ஏதும் இல்லை,” என்றார்.

இதேபோல் பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு நம் வெளியுறவு அமைச்சகமும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி கூறுகையில், “நண்பர்கள், எதிரிகள் யார் என்பதை ஆப்கன் மக்கள் நன்கு அறிவர்.

அவர்களது நாட்டின் எல்லைக்குள் அத்துமீறி அடிக்கடி தாக்குதல் நடத்துவது யார் என்பதும் அவர்களுக்கு தெரியும். ஆப்கன் எல்லைக்குள் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தானின் குற்றச்சாட்டு அபத்தமானது; இது, முற்றிலும் அற்பமான குற்றச்சாட்டு,” என்றார்.

Advertisement