வெயில் தாக்கத்தால் வீராணம் நீர் மட்டம் குறைகிறது: சென்னை குடிநீருக்கு சிக்கல் வருமா

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அடுத்த வீராணம் ஏரியின் நீர்மட்டம் கடும் கோடை வெயில் தாக்கத்தால் கிடு கிடுவென குறைந்து வருகிறது.

காட்டுமன்னார்கோவில் அடுத்த வீராணம் ஏரி மூலமாக 45 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. ஏரியின் மொத்த கொள்ளளவு 1465 மில்லியன் கன அடி.

கடந்த ஆண்டு டிசம்பர் மற்றும் கடந்த ஜனவரி வரை கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தது.

இதனால் ஏரியின் முழு கொள்ளளவான 1465 மில்லியன் கன அடி தண்ணீர் நிரப்பப்பட்டதால் ஏரி 2 முறை முழு கொள்ளளவை எட்டியது. சம்பா அறுவடைக்கு பின்பு, மேட்டூர் தண்ணீர் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து, படிப்படியாக தண்ணீர் வரத்து குறைந்தது.

இதன் எதிரொலியாக பிப்ரவரி துவக்கத்தில் இருந்தே கீழணையில் இருந்து, வீராணம் ஏரிக்கு அனுப்பப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைந்தது. அதே சமயம் பாசனத்திற்கும் தண்ணீர் தேவை இல்லாமல் போனது.

பிப்., 14 ம் தேதி, கீழணையில் நீர் மட்டம் முற்றிலும் வறண்ட நிலையில், வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து நிறுத்தப்பட்டது. பின், ஏரியில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரில் தினமும் சென்னை மக்களின் தேவைக்காக 74 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

மார்ச் மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், தற்போது, கடுமையான வெயில் வீசுகிறது. கோடை வெயில் தாக்கத்தால் ஏரியின் மொத்த கொள்ளளவான 1465 மில்லியன் கன அடியில், தற்போது, நீர் மட்டம் படிப்படியாக குறைந்து, 600 மில்லியன் கன அடி மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. இருப்பில் உள்ள தண்ணீரை 1 மாதம் வரை மட்டுமே சென்னைக்கு அனுப்ப முடியும். அதே வேளையில் மேட்டூரில் 108 அடி தண்ணீர் இருப்பு உள்ளதால், வழக்கம் போல், ஜூன் 12ம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதால், சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்புவதில் சிக்கல் இருக்காது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement