துர்நாற்றம் வீசும் குடிநீரால் வாந்தி, பேதி வேளச்சேரியில் மக்கள் பாதிப்பு

வேளச்சேரி:அடையாறு மண்டலம், 177வது வார்டுக்கு உட்பட்ட வேளச்சேரி பகுதியில், 392 தெருக்கள் உள்ளன. இதில், 85 சதவீத தெருக்கள், பருவமழை காலத்தில் வெள்ளம் சூழ்ந்து பாதிக்கப்படும்.

அதேபோல் இங்கு குடிநீர், கழிவுநீர் குழாய்கள் பதித்து, 40 ஆண்டுக்கு மேலாகிறது. தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ற கொள்ளளவில் குழாய்கள் இல்லை. இதனால், அடிக்கடி குழாயில் விரிசல் ஏற்பட்டு, கழிவுநீர் பிரச்னை அதிகரிக்கிறது.

குறிப்பாக, வீனஸ் காலனி, பாலகிருஷ்ணா நகர், அன்னை இந்திரா நகர், அண்ணா நகர், சீதாபதி நகர், டான்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில், கழிவுநீர் வெளியேறி சாலை, வீட்டு முன் தேங்குவதால், பகுதிமக்கள் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கின்றனர்.

கழிவுநீர் பிரச்னை உள்ள பகுதியில், குடிநீர் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், லாரி குடிநீர் வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இது குறித்து, அன்னை இந்திரா நகர் நலச்சங்க தலைவர் குமாரராஜா கூறியதாவது:

வேளச்சேரியில், பல மாதங்களாக கழிவுநீர் பிரச்னை இருக்கிறது. ஒரு தெருவில் குழாயை சீரமைத்தால், அடுத்த தெருவில் பிரச்னை ஏற்படுகிறது; குடிநீரில் துர்நாற்றம் வீசுகிறது.

இந்த தண்ணீரை பயன்படுத்துவதால் வாந்தி, பேதி ஏற்பட்டு, பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பல வீடுகளில் தொட்டியை சுத்தம் செய்து, லாரி குடிநீர் வாங்கி பயன்படுத்துகின்றனர்.

வாரியத்திற்கு வரி, கட்டணம் செலுத்தியும், லாரி குடிநீர் வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

சதுப்பு நிலத்தின் பரப்பில், வேளச்சேரியின் ஒரு பகுதி உள்ளதால், அங்கு கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு எட்டவில்லை.

தினமும் எதாவது ஒரு தெருவில் அடைப்பை அகற்றி, குழாய் சீரமைப்பு பணி செய்கிறோம்.

ஆனால், கொள்ளளவை மீறி கழிவுநீர் செல்வதால், குழாயில் விரிசல் ஏற்பட்டு, அருகில் உள்ள குடிநீர் குழாயில் கழிவுநீர் கலக்கிறது.

மொத்த குழாய்களையும், நீரோட்டம் பார்த்து புதுப்பித்தால் தான் நிரந்தர தீர்வு எட்டும். இதற்கு உயர் அதிகாரிகள் தான் முடிவு செய்ய வேண்டும். குடிநீரில் கழிவுநீர் கலக்காத வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement