வெற்றி கேப்டன் கோலி

புதுடில்லி: டெஸ்ட் அரங்கில் அதிக வெற்றி பெற்றுத்தந்த இந்திய கேப்டன் பட்டியலில் கோலி முதலிடம். இவரது தலைமையிலான இந்திய அணி, 68 டெஸ்டில், 40 வெற்றி (58.82% வெற்றி சதவீதம்), 11 'டிரா', 17 தோல்வியை பதிவு செய்துள்ளது. அடுத்த இரண்டு இடங்களில் தோனி (27 வெற்றி, 60 டெஸ்ட்), கங்குலி (21 வெற்றி, 49 டெஸ்ட்) உள்ளனர்.
* கோலி தலைமையிலான இந்திய அணி, அதிகபட்சமாக 43 மாதம் (2016 அக்., - 2020 மே) ஐ.சி.சி., டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் 'நம்பர்-1' இடத்தில் இருந்தது.* தொடர்ச்சியாக அதிக டெஸ்ட் தொடர்களை கைப்பற்றிய (9) கேப்டன் பட்டியலில் முதலிடத்தை ஆஸ்திரேலியாவின் பாண்டிங்குடன் பகிர்ந்து கொண்டார் கோலி.
* டெஸ்ட் அரங்கில் அதிக ரன் குவித்த இந்திய கேப்டன் பட்டியலில் கோலி முதலிடம். இதுவரை 68 டெஸ்டில், 5864 ரன் (20 சதம், 18 அரைசதம்) குவித்துள்ளார். அடுத்த இடத்தில் தோனி (3454 ரன், 60 டெஸ்ட்) உள்ளார். சர்வதேச அளவில் 4வது இடத்தில் உள்ளார் கோலி. முதலிடத்தில் தென் ஆப்ரிக்காவின் கிரீம் ஸ்மித் (8659 ரன், 109 டெஸ்ட்) உள்ளார்.
* புனே டெஸ்டில் (2019, எதிர்: தெ.ஆப்.,) 254* ரன் குவித்த கோலி, டெஸ்ட் அரங்கில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் குவித்த இந்திய கேப்டன் ஆனார்.
சாதனை துளிகள்
டெஸ்ட் அரங்கில் கோலி படைத்த சாதனைகளின் விபரம்.
* அடிலெய்டு டெஸ்டில் (2014, எதிர்: ஆஸி.,) அசத்திய கோலி (115, 141), ஒரு டெஸ்ட் போட்டியின், இரு இன்னிங்சிலும் சதம் விளாசிய 4வது இந்திய வீரரானார். ஏற்கனவே விஜய் ஹசாரே, கவாஸ்கர், டிராவிட் இப்படி சாதித்தனர்.
* டெஸ்டில் அதிக சதம் விளாசிய இந்திய வீரர்கள் வரிசையில் 4வது இடத்தில் உள்ளார் கோலி (30). முதல் மூன்று இடங்களில் சச்சின் (51 சதம்), டிராவிட் (36), கவாஸ்கர் (34) உள்ளனர். அதிக சதமடித்த சர்வதேச வீரர்கள் பட்டியலில் 15வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார் கோலி.
* உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக ரன் குவித்த இந்திய வீரர்களில் கோலி (2617 ரன், 46 டெஸ்ட்) 2வது இடம். முதலிடத்தில் ரோகித் (2716 ரன், 40 டெஸ்ட்) உள்ளார். ஒட்டுமொத்தமாக 12வது இடத்தில் உள்ளார் கோலி.
* இந்திய அணியை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு அழைத்துச் சென்ற முதல் கேப்டன் கோலி (2021).
* ஐ.சி.சி., டெஸ்ட் பேட்டர் தரவரிசையில் அதிக புள்ளி (937 புள்ளி, 2018) பெற்ற இந்திய வீரர் கோலி.
ராசியான ஆஸி.,
கோலிக்கு, ஆஸ்திரேலிய மண், ஆஸ்திரேலிய அணி ராசியானது.
* டெஸ்ட் அரங்கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ரன் குவித்த இந்திய வீரர்களில் கோலி 3வது இடம். இதுவரை 30 டெஸ்டில், 9 சதம், 5 அரைசதம் உட்பட 2232 ரன் குவித்துள்ளார். முதலிரண்டு இடங்களில் சச்சின் (3630 ரன், 39 டெஸ்ட்), லட்சுமண் (2434 ரன், 29 டெஸ்ட்) உள்ளனர்.
* ஆஸ்திரேலிய மண்ணில் பங்கேற்ற டெஸ்டில் அதிக ரன் குவித்த இந்திய வீரர்களில் கோலி 2வது இடம். இதுவரை 18 டெஸ்டில், 1542 ரன் எடுத்துள்ளார். முதலிடத்தில் சச்சின் (1809 ரன், 20 டெஸ்ட்) உள்ளார்.
* ஆஸ்திரேலிய மண்ணில் அதிக டெஸ்ட் சதம் விளாசிய இந்திய வீரர்கள் வரிசையில் கோலி (7) முதலிடம். சச்சின் (6) 2வது இடத்தில் உள்ளார்.
* ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய முதல் இந்திய கேப்டன் என்ற சாதனை படைத்தார் கோலி. கடந்த 2018-19ல் இவரது தலைமையிலான இந்திய அணி, 'பார்டர்-கவாஸ்கர்' டிராபி (2-1) வென்றது.
நான்காவது இடம்
டெஸ்ட் அரங்கில் அதிக ரன் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் கோலி 4வது இடம். இவர், 123 டெஸ்டில், 9230 ரன் எடுத்துள்ளார். முதல் மூன்று இடங்களில் சச்சின் (15921 ரன்), டிராவிட் (13288), கவாஸ்கர் (10122) உள்ளனர்.
* டெஸ்டில் 10 ஆயிரம் ரன் என்ற மைல்கல்லை எட்ட கோலிக்கு இன்னும் 730 ரன் மட்டும் தேவைப்பட்டது. இருப்பினும் சாதனையை கண்டுகொள்ளாமல் ஓய்டு பெற்றுவிட்டார்.
* டெஸ்டில் அதிக ரன் குவித்த சர்வதேச வீரர்கள் வரிசையில் 19வது இடத்தில் உள்ளார் கோலி.
ஏழு இரட்டை சதம்
டெஸ்ட் அரங்கில் அதிக இரட்டை சதம் (7) விளாசிய இந்திய வீரர்களில் கோலி முதலிடம். அடுத்த இரு இடங்களில் தலா 6 இரட்டை சதம் விளாசிய சேவக், சச்சின் உள்ளனர்.
* அதிக இரட்டை சதம் அடித்த சர்வதேச வீரர்கள் வரிசையில் கோலி 4வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். முதலிடத்தில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மேன் (12 முறை) உள்ளார்.