ஆதிசக்தி மாரியம்மன் கோவில்

தாய் மனம் குளிர தமிழில் அர்ச்சனை நடக்கும் பெருமைக்குரியது ஆதிசக்தி மாரியம்மன் கோவில். இது, ராபர்ட்சன்பேட்டை 4வது பிளாக் பகுதியில் உள்ளது.

நுாற்றாண்டு பழமை வாய்ந்த இக்கோவில் அரச மரத்தை ஒட்டி, அம்மன் சிரசு சிலையுடன் சிறிய கோவிலாக இருந்தது. அம்மை நோய் ஏற்பட்டோர், அம்மனை வழிபட்டு குணம் அடைந்தனர். திருமணம் ஆகாதவர்கள் பலருக்கு திருமணம் நடந்தது; புத்திர பாக்கியம் கிடைத்தது.

நிலம் வழங்கல்



இக்கோவிலில் அம்மனை வழிபடுவதற்கு ராபர்ட்சன்பேட்டை மட்டுமின்றி தங்கவயலின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்தனர். சக்தி வாய்ந்த அம்மன் கோவிலுக்கு வள்ளி பாயம்மா -- சுப்பிரமணியம் தம்பதி நிலம் வழங்கினர்.

இங்கு 1976ல் ராமகிருஷ்ண செட்டியார் தர்மகர்த்தாவாகவும், ஜே.செல்வராஜ் தலைவராகவும், கே.என்.குமார் பொதுச் செயலராகவும் பொறுப்பேற்று கோவிலின் திருப்பணியை துவக்கினர். 1980ல் கோவில் புதுப்பிக்கப்பட்டது.

மாலுார் சிவாரபட்டினாவில் இருந்து அம்மன் சிலையை கொண்டு வந்து பிரதிஷ்டை செய்தனர். 1982ல் திருவேற்காடு கருமாரியம்மன் கோவில் ஆர்.நாகராஜ குருக்கள், முதல் கும்பாபிஷேகத்தை நடத்தினார்.

கும்பகோணம் காத்தாயிணி அம்மன் கோவில் நாகராஜ் குருக்கள் அம்மனுக்கு தமிழில் அர்ச்சனை செய்தார். அன்று முதல் இன்று வரை இக்கோவிலில் தமிழில் தான் அர்ச்சனை செய்யப்படுகிறது.

இக்கோவிலில் கணபதி, சிவபார்வதி, வள்ளி தெய்வானையுடன் முருகன், வாராஹி, காலபைரவர், நாக தேவதை, துர்க்கை, நவக்கிரஹம், பால முனீஸ்வரர் ஆகிய சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன.

அனைத்து பூஜைகள்



வேண்டிய வரம் கிடைப்பதால், பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. சைவ வழிபாட்டின் அனைத்து பூஜைகளும் நடப்பது மிக விசேஷமாகும். விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி; முருகனுக்கு சஷ்டி, கிருத்திகை; சிவனுக்கு பிரதோஷம்; அம்மனுக்கு பவுர்ணமி; பைரவருக்கு அஷ்டமி பூஜைகள் சிறப்புற நடக்கும். நவராத்திரியில் ஒன்பது நாட்களும் அம்மனுக்கு ஒவ்வொரு அலங்காரம் நடக்கிறது.

வாராஹி அம்மனுக்கு 12 நாட்கள் விரதம் இருந்து பூஜித்தால் கடன் தொல்லை, எதிரிகள், தீயசக்திகள் விலகி பொசுங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், தங்கவயல் மட்டுமின்றி, வெளி மாநிலத்தவரும் பூஜையில் பங்கேற்கின்றனர்.



இக்கோவில், ராபர்ட்சன்பேட்டை பஸ் நிலையத்தின் மேற்கே 200 மீட்டர் தொலைவிலும், உரிகம் ரயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ., துாரத்திலும் உள்ளது.

 இக்கோவில் நடை காலை 7:00 மணி முதல் 10:30 மணி வரையிலும்; மாலை 5:30 முதல் இரவு 8:00 மணி வரை கோவில் திறந்திருக்கும். செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் காலை 6:00 மணி முதல் முற்பகல் 11:00 மணி வரையிலும்;மாலை: 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையிலும் திறந்திருக்கும். அமாவாசை தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள். ஆண்டுதோறும் ஆடி மூன்றாம் வெள்ளியன்று கோவிலின் ஆண்டு விழா நடத்தப்படுகிறது. குடும்பங்களில் திருமண வைபவம் நடக்கும்போது, தாய் வீட்டில் இருந்து மணப்பெண்ணை ஊர்வலமாக அழைத்து கோவிலுக்குச் செல்வர். அங்கு சாமி தரிசனம் செய்த பின்னரே, மணமேடைக்கு அழைத்துச் செல்லும் வழக்கமும் உள்ளது. 'தாலி பாக்கியம்' என்பது அம்மன் அருளிய வரம் என்பதே பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.  'தினமலர்' நாளிதழ் நடத்திய நவராத்திரி கொலுவில் வழங்கப்பட்ட சான்றிதழை பெருமையுடன் கோவிலில் வைத்துள்ளனர்.





- நமது நிருபர் -

Advertisement