காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தம் காங்கிரசின் 'எக்ஸ்' பதிவு நீக்கம்

பெங்களூரு : தன் 'எக்ஸ்' பக்கத்தில் கர்நாடக காங்கிரஸ் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிடுவதும், எதிர்ப்புகள் வந்த பிறகு அதை நீக்குவதையும் வழக்கமாக வைத்துள்ளது. அவ்வகையில், நேற்று காலை பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை பதிவிட்டு, 'நம் நாட்டின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு உலக வங்கி 8,500 கோடி ரூபாய் கடன் அளித்துள்ளது' என பதிவிட்டது.
இந்த பதிவில், 'ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தம்' என சித்தரிக்கப்பட்டது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சில மணி நேரத்திற்கு பின், அந்த பதிவு நீக்கப்பட்டது. இருப்பினும், இதை சுட்டிக்காட்டி காங்கிரசை பா.ஜ.,வினர் விமர்சித்து வந்தனர்.
இதையறிந்த, கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவகுமார், இந்த பதிவை உருவாக்கிய நபர்களை கடுமையாக கண்டித்துள்ளார்.
இதுகுறித்து சிவகுமார் கூறுகையில், ''தவறான பதிவு செய்யப்பட்டுள்ளது. எங்கோ ஒரு இடத்தில் சிறிய தவறு நடந்துவிட்டது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்,'' என்றார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக சட்டசபை பா.ஜ., எதிர்க்கட்சித் தலைவர் அசோக், தன் 'எக்ஸ்' பக்கத்தில் கூறியுள்ளதாவது:
காஷ்மீர், பாகிஸ்தானுக்கு சொந்தம் என காங்கிரஸ் கூறியுள்ளது. இதன் மூலம் பாக்., மீதான தன் விசுவாசத்தை மீண்டும் காங்கிரஸ் வெளிப்படுத்தி உள்ளது. கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் ஐ.டி., பிரிவினர், பாகிஸ்தானின் ஸ்லீப்பர் செல்களாக செயல்படுகின்றனர்.
ஆப்பரேஷன் சிந்துாருக்கு முன்பு, பாகிஸ்தானுக்கு எதிராக போர் வேண்டாம் என முதல்வர் சித்தராமையா கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், போர் வேண்டும் என்றார். இவை அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.