பொள்ளாச்சி வழக்கில் ஆயுள் தண்டனை; கோவை மக்கள் காரசார கருத்து

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பான தீர்ப்பு, நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய 9 குற்றவாளிகளுக்கும், 'சாகும் வரை ஆயுள் தண்டனை' தீர்ப்பை, நீதிபதி நந்தினி தேவி வழங்கியுள்ளார்.
இதுகுறித்து, பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சிலரிடம் பேசினோம்...
'மனநிலை மாறணும்'
பெண்கள் அணியும் ஆடைகளை விமர்சிப்பவர்கள், சமூகத்தில் ஓர் அங்கமாக இருக்கின்றனர். பெண்களுக்கு எதிரான ஆண்களின் மனநிலை, அவரின் குடும்பத்தில் இருந்து துவங்குகிறது. அனைவரையும் சகோதரியாக பார்க்கும் பண்பு, குடும்பத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும்,
- மங்களேஸ்வரி, -சாலையோர வியாபாரி
'சட்டம் கடுமையாகணும்'
இந்த தண்டனையை வரவேற்கிறேன். ஆனால் ரொம்ப லேட். குற்றவாளிகள் அரசியல் பின்புலம் கொண்டவர்கள் என்பதால், விரைவில் விடுவிக்கப்படுவர் என்ற பயம் உள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சட்டங்கள் இன்னும் கடுமையாக வேண்டும்.
-கிருத்திகா, கல்லூரி மாணவி
'கடுமை இல்லை'
இந்த வழக்கில் அரசியல் தலையீடு இருந்தது. கடுமையான தண்டனை வழங்கியிருக்க வேண்டும். இது போன்ற தவறுகள் செய்ய யாரும் துணியக்கூடாது என்ற பயம் ஏற்படும் வகையில், தண்டனை வழங்கியிருந்தால் வரவேற்றிருப்போம்.
- வெங்கடேஷ், ஆட்டோ ஓட்டுநர்
'கடுமை இல்லை'
நம்நாட்டில், பாலியல் குற்ற வழக்குகளில் தீர்ப்பு விரைவாக வருவதில்லை. பெண்களுக்கு எதிரான வழக்குகள் இன்னும் மோசமாக இழுபறியாகவே உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் மேல் தவறுகள் சுமத்தப்படும். வழக்கில், தண்டனை கடுமையாக வழங்கி இருக்க வேண்டும்.
-நிவின், மருத்துவ மாணவர்
'தக்க தண்டனை'
குற்றவாளிகளுக்கு எதிரான சாட்சியங்களை உறுதிப்படுத்த காலதாமதம் ஆகும். இது சி.பி.சி.ஐ.டி., வழக்கு என்பதால், சாட்சியங்கள் பாதுகாக்கப்பட்டு, தக்க தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் மேல்முறையீடு செய்தாலும், அவர்கள் மீண்டும் வெளியே வர முடியாது என நம்புகிறேன்.
- ஆர்ஜூன், -சிவில் சர்வீஸ் தேர்வாளர்
'வலிகளுக்கு பதிலாக இல்லை'
தீர்ப்பு மிகக் காலதாமதமாக வழங்கப்பட்டுள்ளது. கடுமையான தண்டனை வழங்கியிருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, இழப்பீடு வழங்கினால் போதுமா? அவர்களின் எதிர்காலமே பாதிக்கப்பட்டு விட்டது. இந்த தீர்ப்பு, அவர்கள் சந்தித்த வலிகளுக்கு சரியான பதிலாக இல்லை.
-முத்துரத்தினம், -பிரிண்டிங் தொழிலாளர்
'நீதி கிடைத்து விட்டது'
இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக அரசு மற்றும் காவல்துறை இருந்தது. எங்களைப் போன்ற அமைப்புகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது. பல்வேறு மிரட்டல்களை எதிர்கொண்டோம். தொடர் போராட்டத்திற்குப் பிறகு விசாரணை அதிகாரி மாற்றப்பட்டு, வழக்கு சரியான பாதையில் செல்லத் தொடங்கியது. நீதி கிடைத்துவிட்டது.
- ராதிகா, -மாதர் சங்கம்
'சாட்சியங்களுக்கு பங்கு'
இந்த வழக்கில் தொழில்நுட்ப சாட்சியங்கள் முக்கிய பங்காற்றின. அழிக்கப்பட்ட சாட்சியங்களை மீண்டும் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது. மொத்தம் 66 சாட்சியங்கள் உள்ளன. மகளிர் கோர்ட் வழக்குகளை மற்ற வழக்குகள் போல், விரைவாக விசாரிக்க முடியாது. வழக்கு சரியான முறையில் நடந்தபோது தான் இவ்வாறான தீர்ப்பு கிடைத்தது.
- ஜீஷா, -மகளிர் கோர்ட் அரசு வக்கீல்
இது போன்ற தீர்ப்புகளை நீதிமன்றங்கள் வழங்கும் போது, நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்ணின் பாதுகாப்பும் உறுதியாகிறது. பெண்கள் சமூகத்தின் ஓர் அங்கம். அவர்களுக்கு பாதுகாப்பும் மதிப்பும் வழங்கப்படும் போது, சமூகம் தானாக வளர்ச்சி அடையும்.
- கலைச்செல்வி, -வக்கீல்
'அரசியல் தலையீடு'
வழக்கு தொடங்கிய நாளிலிருந்து, அரசியல் தலையீடுகள் இருந்ததால், வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லை. சி.பி.சி.ஐ.டி.,-க்கு மாற்றப்பட்ட பிறகுதான் முழுமையான விசாரணை நடந்தது. இந்த தண்டனை சரியா, தவறா என்பது விவாதிக்கப்பட வேண்டிய விஷயமல்ல. ஆனால், மக்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை நீதிமன்றங்கள்தான்.
- சுகன்யா சீனிவாசன், -வக்கீல்