பாதுகாப்பான ராமநாதபுரம் திட்டத்தில் சி.சி.டி.வி., கேமரா சந்தீஷ் எஸ்.பி., தகவல்
ராமநாதபுரம், : தமிழகத்தில் நடப்பு ஆண்டில் பிற மாவட்டங்களை விட அதிக எண்ணிக்கையில், 'பாதுகாப்பான ராமநாதபுரம்' திட்டத்தில் குற்றங்களை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் 2000 சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என மாவட்ட எஸ்.பி., சந்தீஷ் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் சி.சி.டி.வி., கேமரா பொருத்தி உட்கட்டமைப்பை மேம்படுத்துவது, குற்றச் சம்பவங்களை தடுக்க முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதன்படி அனைத்து உட்கோட்ட டி.எஸ்.பி.,க்கள், பொறுப்பு அலுவலர்கள், தனிப்பிரிவு போலீசார் இணைந்து தாய் கிராமம் மற்றும் குக்கிராமங்களுக்கு சென்று பொதுமக்களுடன் நேரடி தொடர்பு ஏற்படுத்தி சி.சி.டி.வி., கேமராக்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து வருகின்றனர்.
இதன் காரணமாக நடப்பு ஆண்டில் (2025ல்) இதுவரை மாவட்டத்தில் 2000 சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்ட்டுள்ளன. தொலைதுாரத்தில் உள்ள கடலோரக் கிராமங்களான ஆற்றாங்கரை, வாலிநோக்கம் ஆகிய இடங்களில் முழுமையாக சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
மேலும் 100 தாய் கிராமங்கள், 300க்கு மேற்பட்ட குக்கிராமங்களில் முதன் முறையாக சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்றார்.