சிங்கபெருமாள் கோவிலில் மின் விளக்குகளின்றி அவதி

மறைமலைநகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில், 20,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். நுாற்றுக்கும் மேற்பட்ட வணிக கட்டடங்கள் உள்ளன.
சுற்றியுள்ள, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வங்கி, மருத்துவமனை, கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு, தினமும் வந்து செல்கின்றனர்.
இங்கு வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் வாடகைக்கு தங்கி, ஒரகடம் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வருகின்றனர்.
இங்கு ஜி.எஸ்.டி., சாலை சந்திப்புகளில் போதிய அளவு மின் விளக்குகள் இல்லாததால், அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் பேருந்துக்காக காத்திப்போர், அச்சத்துடன் காத்திருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இது குறித்து, அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் கூறியதாவது:
திருத்தேரி சந்திப்பு, திருக்கச்சூர் சாலை சந்திப்புகளில், இருள் சூழ்ந்த பகுதியில் பேருந்துக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. திருட்டு மற்றும் விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்துடன் வந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் இந்த பகுதிகளில் உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.