துருக்கி பல்கலையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்: நிறுத்தி வைத்தது ஜேஎன்யு

3

புதுடில்லி: துருக்கிக்கு எதிராக இந்தியர்கள் மத்தியில் கோபம் எழுந்துள்ள நிலையில், அந்நாட்டின் பல்கலை உடன் செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைப்பதாக டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை அறிவித்து உள்ளது.

இந்தியாவுக்கு எதிரான மோதலில் பாகிஸ்தானுக்கு ட்ரோன் மற்றும் ஆபரேட்டர்கள் உதவி செய்த துருக்கி மீது இந்தியர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அந்நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது, இந்தியா மீட்புப் பணியில் ஈடுபட்டதுடன், பல்வேறு உதவிகளையும் செய்தது. ஆனால், இதனை நினைவில் கொள்ளாமல் காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் பாகிஸ்தானை அந்நாடு ஆதரித்து வருகிறது. இதனால், அங்கு சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை சரிந்துள்ளது. மேலும், அந்நாட்டில் இருந்து ஆப்பிள் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்யப்போவதில்லை என பல வர்த்தகர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், துருக்கியின் இனோனு பல்கலையுடன் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக ஜவஹர்லால் நேரு பல்கலை அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ஜேஎன்யு மற்றும் இனோனு பல்கலையுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை மறு அறிவிப்பு வரும் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளது. தேசத்துடன் இணைந்து ஜேஎன்யு நிற்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

சர்வதேச கல்வி நிறுவனங்களுடன் இந்திய கல்வி நிறுவனங்கள் இணைந்து செயல்படும் நோக்கத்தின் அடிப்படையில், பல்கலைக்கழகங்களுக்கு இடையே ஒத்துழைப்பு, ஆராய்ச்சி பரிமாற்றம், மாணவர்களை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றுக்காக போடப்பட்ட இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் 2025 பிப்., 3ல் கையெழுத்தாகி உள்ளது. 2028 பிப்., 3 வரை இந்த ஒப்பந்தம் செல்லுபடியாகும்.

Advertisement