உண்மை அடிப்படையில் நாட்டை இயக்க வேண்டும்: சொல்கிறார் ராகுல்

27

புதுடில்லி: '' பயத்தை வைத்து நாட்டை இயக்கக்கூடாது. உண்மை மற்றும் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் இயக்க வேண்டும்,'' என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.



குஜராத்தை சேர்ந்த நாளிதழின் இணை நிறுவனர் பாகுபலி ஷாவை சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதன் பிறகு, மருத்துவ காரணங்களுக்காக அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. இந்த விவகாரத்தில் குஜராத் மாநில பா.ஜ, மற்றும் காங்கிரஸ் இடையே வார்த்தைப் போர் ஏற்பட்டு உள்ளது.


இந்நிலையில், இந்த கைதுக்கு கண்டனம் தெரிவித்து லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: குஜராத் நாளிதழின் குரலை ஒடுக்குவது என்பது, ஒரு நாளிதழை மட்டும் அல்லாமல், ஒட்டு மொத்த ஜனநாயகத்தையும் ஒடுக்குவதற்கு நடக்கும் சதியாகும். நாளிதழுக்கு உள்ள உரிமையை முடக்குவது என்பது ஜனநாயகம் ஆபத்தில் உள்ளதை காட்டுகிறது.


பாகுபலி ஷா கைது செய்யப்பட்டு உள்ளது, பயம் கலந்த அரசியலின் ஒரு அங்கம் ஆகும். இது மோடி அரசின் அடையாளம். பயத்தை வைத்து நாட்டை இயக்கக்கூடாது. உண்மை மற்றும் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் நாடு இயக்கப்பட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.

Advertisement