பைனலில் இந்திய அணி * தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில்...

யுபியா: தெற்காசிய கால்பந்து (19 வயது) தொடரின் பைனலுக்கு இந்தியா முன்னேறியது. நேற்று நடந்த அரையிறுதியில் 3-0 என மாலத்தீவு அணியை வீழ்த்தியது.
அருணாச்சல பிரதேசத்தில், 19 வயதுக்குட்பட்டோருக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 7வது சீசன் நடக்கிறது. இந்தியா, 'நடப்பு சாம்பியன்' வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 அணிகள், 2 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன.
'பி' பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, பங்கேற்ற 2 போட்டியிலும் வென்று, 6 புள்ளியுடன் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. இதில் நேற்று 'ஏ' பிரிவில் இரண்டாவது இடம் பிடித்த மாலத்தீவு அணியை எதிர்கொண்டது.
போட்டியின் 14வது நிமிடத்தில் இந்தியாவுக்கு 'கார்னர் கிக்' வாய்ப்பு கிடைத்தது. இதில் பிரஷன் ஜாஜோ பந்தை அடித்தார். இதை வாங்கிய டேனி மீட்டெய், இடது காலால் உதைத்து கோலாக மாற்றினார். இத்தொடரில் மீட்டெய் அடித்த ஐந்தாவது கோல் இது.
போட்டியின் 22 நிமிடத்தில் இந்திய வீரர் ஓமங் டோடும் தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்தார். முதல் பாதியில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் பலத்த மழை பெய்தது. இருப்பினும் போட்டி தொடர்ந்து நடந்தது. 65 வது நிமிடத்தில் மீட்டெய் அடித்த பந்தை மாலத்தீவு கோல் கீப்பர் வெளியே தள்ளி விட்டார். அங்கிருந்த பிரஷன் ஜாஜோ மீண்டும் வலைக்குள் தள்ளி கோலாக மாற்றினார். முடிவில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது.
வங்கதேசம் வெற்றி
நேற்று நடந்த மற்றொரு அரையிறுதியில் நடப்பு சாம்பியன் வங்கதேசம், நேபாள அணிகள் மோதின. இதில் வங்கதேச அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. நாளை நடக்கும் பைனலில் இந்தியா, வங்கதேச அணிகள் மோத காத்திருக்கின்றன.