லஞ்சம் கேட்டதாக அமலாக்க துறை அதிகாரி மீது வழக்கு

கொச்சி: தொழிலதிபர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், லஞ்சம் கேட்டதாக, அமலாக்கத்துறை அதிகாரி மீது கேரள லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கேரளாவில் மார்க்.கம்யூ.,வைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.

கொச்சியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், மத்திய விசாரணை அமைப்பான அமலாக்கத் துறையின் கொச்சி பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் மீது, கேரள லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

இது தொடர்பாக, கொச்சி நீதிமன்றத்தில், லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த அறிக்கை:

பண மோசடி வழக்கு தொடராமல் இருப்பதற்காக, 2 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாக, தொழிலதிபர் ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக, கொச்சியைச் சேர்ந்த ஆடிட்டர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில், அமலாக்கத் துறை அதிகாரியே முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த அதிகாரியிடம் விசாரணை நடந்து வருகிறது. இதுவரை கைது செய்யப்படவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

'தொழிலதிபரின் புகாரின்படி தான், அமலாக்கத் துறை அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பிறகே, அவருக்கு இதில் தொடர்பு உள்ளதா என்பது உறுதி செய்யப்படும்' என, லஞ்ச ஒழிப்புத் துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement