அடிப்படை வசதிகளின்றி அகதி வாழ்க்கை அம்பாத்துறை ஊராட்சியில் நீடிக்கும் அவதி

சின்னாளபட்டி: அம்பாத்துறை அருகே இந்திரா நகர், சலவை தொழிலாளர் குடியிருப்பு பகுதியினர், குடிநீர், தெருவிளக்கு, சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி அவதிக்குள்ளாவதாக புலம்புகின்றனர்.
ஆத்துார் ஒன்றியம் அம்பாத்துறை ஊராட்சிக்கு உட்பட்ட அம்பாத்துறை, ராகலாபுரம், வேலம்பட்டி, இந்திரா நகர், சலவை தொழிலாளர் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில், அடிப்படை வசதிகளை பராமரிப்பதில் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக புகார் நீடிக்கிறது.சலவை தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் ரோடு வசதியின்றி சாரல் மழை காலங்களிலும், சகதி, கழிவு நீரை மிதித்து கடந்து செல்லும் அவல நிலை உள்ளது. தெருவிளக்கு வசதிகள் பெயரளவில் கூட இல்லை. இந்திரா நகர் பகுதியில் ஜல்ஜீவன் திட்ட குழாய் இணைப்பு, செயல்பாடின்றி கிடக்கிறது. 2 வாரங்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் நடப்பதால் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இங்குள்ள ஆழ்துளை கிணற்றுடன் கூடிய தண்ணீர் தொட்டி 10 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பாடின்றி மாட்டுதொழுவமாக மாறி உள்ளது. மேல்நிலைத் தொட்டி பராமரிப்பின்றி சேதம் அடைந்துள்ளது.போதிய அடிப்படை வசதிகளற்ற சூழலுக்கு, நிரந்தர தீர்வு காண மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சகதியால் தவிப்பு
சிங்கராஜ் ,கூலித்தொழிலாளி, இந்திரா நகர் : குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் ரோடு வசதி ஏற்படுத்துவதில் உள்ளாட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுகிறது. சாரல் மழை பெய்தால் கூட சகதிக்காடாக மாறி பலர் தடுமாறி கீழே விழும் அவல நிலை நீடிக்கிறது. இப்பகுதியினர் சொந்த செலவில் மண் மூலம் மேடு பள்ளங்களை நிரவல் செய்துள்ள சூழலில் உள்ளாட்சி நிர்வாகம் குறைந்தபட்சம் பேவர் பிளாக் ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
தண்ணீர் தட்டுப்பாடு
பாக்கியம், குடும்பத்தலைவி, சலவை தொழிலாளர் குடியிருப்பு : போதிய குடிநீர் விநியோகம் இல்லை .தெரு குழாய்களில் இரு வாரங்களுக்கு ஒரு முறை குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே சப்ளை நடக்கிறது. சில வீடுகளுக்கு மட்டுமே இணைப்பு கொடுத்துள்ளனர். மேல்நிலை தண்ணீர் தொட்டி சேதமடைந்து உள்ளது. 20 ஆண்டுகளாகியும் இப்பகுதியினருக்கு பட்டா உள்ளிட்ட வருவாய் துறை சார்ந்த வசதிகள் கிடைப்பதில் தாமதம் நீடிக்கிறது.
--நடவடிக்கை இல்லை
கவிதா ,குடும்பத்தலைவி இந்திரா நகர் : 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆழ்துளைக் கிணறுடன் கூடிய தண்ணீர் தொட்டி காட்சி பொருளாக கிடப்பில் விட்டுள்ளனர். அதிகாரிகள் உள்ளாட்சிப் பிரதிநிதிகளிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை .
குப்பை நிரம்பிய சூழலில் கொசு தொல்லை விஷப்பூச்சிகள் நடமாட்டம் உள்ளது . இரு வீடுகளை தவிர பிற குடியிருப்புகளுக்கு தண்ணீர் இணைப்பு குழாய் இணைப்பு வழங்கப்படவில்லை. போதிய குடிநீர் கிடைக்காமல் ஒரு குடம் ஐந்து ரூபாய் என்ற செலவினத்தில் தண்ணீர் விலைக்கு வாங்கி பயன்படுத்த வேண்டிய சூழல் நீடிக்கிறது. கிராமங்களில் ஓரிரு நாட்கள் இடைவெளியில் தண்ணீர் வினியோகம் நடக்கும் சூழலில் இப்பகுதி மட்டும் குடிநீர் வினியோகத்தில் புறக்கணிக்கப்பட்டு உள்ளது.
மேலும்
-
வாழை நாரில் கலைப்பொருள் பார்வையற்ற சிறார்கள் அசத்தல்
-
புறாக்களுக்கு சிகிச்சை அளிக்கும் ஒரே மருத்துவமனை
-
கரூர்-கோவை சாலையில் பள்ளம் வாகன ஓட்டிகள் கடும் அவதி
-
அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
-
வயலுாரில் தெரு விளக்கு பராமரிப்பு பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள்
-
டோல்கேட் சுகாதார வளாகம் மூடப்பட்டதால் பொது மக்கள் அவதி