ரயில்வே மேம்பால பணி வேப்பம்பட்டில் தொடரும் அவதி

திருவள்ளூர்:சென்னை - திருவள்ளூர் ரயில்வே மார்க்கத்தில், வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன. இந்த இரண்டு கிராமங்களில் இருந்து ரயில்வே கடவுப்பாதையை கடக்க, கடவுப்பாதை எண், 13, 14 மற்றும் 15 ஆகிய இடங்களில் ரயில்கள் செல்லும் போது, அடிக்கடி 'கேட்' மூடப்பட்டு வருகிறது.

இதனால், ரயில்வே கடவுப்பாதையின் இடதுபுறம் உள்ள பூந்தமல்லி சாலையில் உள்ள கிராமவாசிகள் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தோர் அவதிப்பட்டு வருகின்றனர்.

வேப்பம்பட்டில் 2009ம் ஆண்டு 29.5 கோடி ரூபாயிலும், செவ்வாப்பேட்டையில் 2015ம் ஆண்டு 20 கோடி ரூபாயிலும் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி துவங்கியது. ஆனால், பல்வேறு இடையூறு காரணமாக, மேம்பால பணிகள் இதுவரை நிறைவடையாமல் உள்ளது.

குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவடையாததால், கட்டுமான பொருட்கள் விலை உயர்வால், நெடுஞ்சாலை துறையினர் நிர்ணயித்த தொகையில் பணிகள் நிறைவடையாமல் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு பகுதிகளில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பால பணியை, கலெக்டர் பிரதாப் நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது, பாலம் அமைக்கும் பணியின் முன்னேற்றம் குறித்து நெடுஞ்சாலைத் துறையினரிடம் கேட்டறிந்தார். மேலும், பணிகளை விரைந்து முடித்து, விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக, பட்டாபிராம் பகுதியில், புதிதாக 1.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாதிரி பள்ளி கட்டுமான பணியையும் பார்வையிட்டார்.

Advertisement