பாக்.,கிற்கு கடன் வழங்கிய சர்வதேச நிதியம் புதிய நிபந்தனைகள்!:

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கு கடன் உதவியை வழங்கியுள்ள, ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நாணய நிதியம் புதிதாக, 11 நிபந்தனைகளை விதித்துள்ளது. மேலும், இந்தியாவுடனான பதற்றம் நீடித்தால், மிகப்பெரிய சிக்கலை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தான், கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. இதற்காக, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் வாங்கி வருகிறது.
சமீபத்தில், பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா, 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற நடவடிக்கையை எடுத்தது. இதில் பாகிஸ்தானுக்கு கடும் சேதம் ஏற்பட்டது.
இந்த சூழ்நிலையில், பாகிஸ்தானுக்கான கடனில் இரண்டாம் கட்டமாக, 8,670 கோடி ரூபாயை, சர்வதேச நாணய நிதியம் சமீபத்தில் விடுவித்தது.
ஒப்புதல்
அடுத்தகட்ட நிதியை விடுவிப்பதற்காக, பாகிஸ்தானுக்கு, சர்வதேச நிதியம் புதிதாக, 11 நிபந்தனைகளை விதித்துள்ளது. இதன் வாயிலாக, நிபந்தனைகளின் எண்ணிக்கை, 50 ஆக உயர்ந்துள்ளது.
அடுத்த தவணையை விடுவிப்பதற்கு முன்பாக, இந்த புதிய நிபந்தனைகளை அமல்படுத்த வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் கூறி உள்ளது.
இதில் பெரும்பாலான நிபந்தனைகளை வரும் ஜூன் மாதத்துக்குள் நிறைவேற்ற வேண்டும் என, சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.
'இந்தியாவுடன் தேவையில்லாமல் பதற்றத்தை அதிகரிக்கும் சம்பவங்களில் ஈடுபட்டால், அது பாகிஸ்தானின் நிதி மற்றும் சீர்திருத்த இலக்குகளுக்கு ஆபத்தை அதிகரிக்கக்கூடும்' என, இந்த நிபந்தனைகளுடன், சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கையும் விடுத்துஉள்ளது. தற்போது விதிக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனைகளில் மிக முக்கியமாக, கூடுதலாக, 534 கோடி ரூபாய் மதிப்புள்ள வரி சீர்திருத்த பட்ஜெட்டுக்கு, பார்லிமென்டில் ஜூன் மாதத்துக்குள் ஒப்புதல் பெற வேண்டும்.
குறிப்பாக, மின்சார கட்டண சலுகைகளில் ஏற்பட்ட பெரும் இழப்பை ஈடு செய்யும் வகையில், கட்டணத்தை சீரமைக்க வேண்டும், வரியை உயர்த்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மானியம் ரத்து
இதனால், மின்சார கட்டணத்தை கடுமையாக உயர்த்த வேண்டிய நிலைக்கு பாக்., அரசு தள்ளப்பட்டுள்ளது.
அதுபோலவே, சமையல் காஸ் விலையையும் ஆண்டுக்கு குறைந்தபட்சம், இரண்டு முறை உயர்த்த வேண்டும்.
இதிலும் சலுகைகள், மானியங்களை ரத்து செய்ய, சர்வதேச நிதியம் உத்தரவிட்டுள்ளது.
அடுத்ததாக, விவசாயத்துக்கான வருமான வரியை நிர்ணயிப்பதில் சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கவும், பாகிஸ்தானுக்கு, சர்வதேச நிதியம் நிபந்தனை விதித்துள்ளது.
தங்களுடைய பரிந்துரைகளின் அடிப்படையில், 2027ல் இருந்து மேற்கொள்ள உள்ள சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்பாக விரிவான திட்டங்களை தெரியப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
ராணுவத்துக்கான பட்ஜெட்டை அதிகரித்துள்ளது குறித்தும் சர்வதேச நாணய நிதியம் தன் கவலையை தெரிவித்துள்ளது.
'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கைகளை தொடர்ந்து, மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் காப்பியடித்து வருகிறார், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்.பிரதமர் நரேந்திர மோடி, எல்லைக்குச் சென்று ராணுவ வீரர்களை சந்தித்தார். அதுபோலவே, ஷெரீப்பும், தன் ராணுவ வீரர்களை சந்தித்தார்.முன்னதாக துாதரக உறவை துண்டிப்பது உள்ளிட்ட அறிவிப்புகளை மோடி வெளியிட்டார். அதையும் தன் நடவடிக்கைகளாக ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டார் ஷெபாஸ்.தற்போது, பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கும் வகையில், அனைத்துக் கட்சி குழுக்களை அனுப்புவதாக, மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்தது.அதுபோலவே, தன் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு தெரிவிக்கும் வகையில், சிறப்பு குழுவை அனுப்ப உள்ளதாக, ஷெபாஸ் ஷெரீப் நேற்று அறிவித்தார். முன்னாள் வெளியுறவு அமைச்சரும், பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவருமான பிலாவல் புட்டோ சர்தாரியுடன் இது தொடர்பாக அவர் பேசியுள்ளார். இந்தக் குழுவுக்கு, பிலாவல் புட்டோ தலைமை ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தக் குழு, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
இரவிலும் இயங்கும் கல்குவாரியால் அபாயம்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
-
வட்டிப்பணம் ரூ.8 கோடி; ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு வழங்க வேண்டிய பி.எப்., நிலுவை; இழப்புக்கு மேல் இழப்பு ஏற்படுவதை தவிர்க்குமா மாநகராட்சி
-
இன்றைய நிகழ்ச்சி மதுரை
-
தினமலர் செய்தியால் கிடைத்தது தரைப் பாலம்
-
மாணவர்களுக்கு பாராட்டு
-
வாடகை கட்டடத்தில் ரேஷன் கடைகள்