இரண்டாவது சுற்றில் மணிகா: உலக டேபிள் டென்னிசில்

தோகா: உலக டேபிள் டென்னிஸ் 2வது சுற்றுக்கு இந்தியாவின் மணிகா பத்ரா, மானவ் தாக்கர் முன்னேறினர்.
கத்தார் தலைநகர் தோகாவில், உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் மணிகா பத்ரா, நைஜீரியாவின் பாத்திமோ பெல்லோ மோதினர். மணிகா 4-0 (11-5, 11-6, 11-8, 11-2) என வெற்றி பெற்று, 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் தியா 4-0 (11-4, 11-7, 11-3, 14-12) என ஸ்பெயினின் சோபியா-ஜுவான் ஜாங்கை வீழ்த்தினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் மானவ் தாக்கர், நியூசிலாந்தின் டிமோதி சோய் மோதினர். இதில் மானவ் 4-1 (11-3, 11-8, 6-11, 11-7, 14-12) என வெற்றி பெற்று 2வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் அங்கூர் பட்டாசார்ஜி 1-4 (11-4, 7-11, 9-11, 10-12, 8-11) என ஹாங்காங்கின் லாம் சியு ஹாங்கிடம் தோல்வியடைந்தார். இந்தியாவின் மானுஷ் ஷா 4-2 (11-6, 2-11, 11-7, 11-6, 5-11, 11-6) என போர்ச்சுகலின் தியாகோ அபோலோனியாவை வென்றார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சத்யன் ஞானசேகரன், ஹர்மீத் தேசாய் ஜோடி 1-3 (9-11, 12-10, 14-16, 10-12) என ஆஸ்திரியாவின் மசீஜ், மால்டோவாவின் விளாடிஸ்லாவ் உர்சு ஜோடியிடம் வீழ்ந்தது.
கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் மானுஷ் ஷா, தியா ஜோடி 3-0 (11-2, 11-7, 11-6) என அல்ஜீரியாவின் மெஹ்தி, மலிசா நாஸ்ரி ஜோடியை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய், யாஷஸ்வினி ஜோடி 2-3 என பிரான்ஸ் ஜோடியிடம் தோல்வியடைந்தது.