ஆஸ்திரேலிய பட்டாணி இறக்குமதியை அனுமதிக்க வியாபாரிகள் வலியுறுத்தல் 

சென்னை:அதிக சுவை உடைய ஆஸ்திரேலிய கஸ்பா பட்டாணி இறக்குமதியை அனுமதிக்குமாறு, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியுஷ் கோயல் ஆகியோருக்கு, தமிழக வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, தமிழக உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம் கூறியதாவது:

நாட்டின் மொத்த பட்டாணி தேவையில், 15 சதவீதம் தான் உள்நாட்டில் விளைகிறது. மீதி, கனடா, ரஷ்யா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. ஆனால், 2020ல் பட்டாணி இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது.

தொடர்ந்து விடுத்த கோரிக்கையை ஏற்று கனடா, ரஷ்யாவில் இருந்து பட்டாணி இறக்குமதி செய்ய 2023 டிசம்பரில் அனுமதிக்கப்பட்டது. இருப்பினும், அதிக சுவையுடைய ஆஸ்திரேலிய கஸ்பா பட்டாணி இறக்குமதிக்கு அனுமதியில்லை.

பட்டாணி இறக்குமதிக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தான் அனுமதி வழங்கப்படுகிறது. இதனால், ஆர்டர் பெற்று இறக்குமதி செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. உளுந்து, துவரையை வரியின்றி இறக்குமதி செய்ய, 2026 டிசம்பர் வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், பட்டாணி இறக்குமதி செய்வதற்கும் நீண்ட காலத்திற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்.

பட்டாணிக்கு தற்போது வரை வரி இல்லை. இந்நிலையில், அடுத்த மாதம் பட்டாணிக்கு வரி விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த வரி, 5 - 11 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும். அதற்கு மேல் வரி விதிக்கக் கூடாது.

பட்டாணிக்கு இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்ட கடந்த ஒன்றரை ஆண்டுகளில், 32 லட்சம் டன் பட்டாணி இறக்குமதியாகி உள்ளது. இதனால், அதிக சுவை உடைய ஆஸ்திரேலியன் கஸ்பா பட்டாணியை இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியுஷ் கோயலுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement