தவறுகளால் பாடம் கற்குமா இண்டஸ்இண்ட் வங்கி?

புதுடில்லி:கிட்டத்தட்ட 4.20 கோடி வாடிக்கையாளர்கள், 3,000க்கும் மேற்பட்ட கிளைகள், அதே அளவுக்கு ஏ.டி.எம்.,கள். பங்குச் சந்தையின் நிப்டி, டாப் 50 பட்டியலில் இடம் என, பரந்து விரிந்த தனியார் வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி.
மார்ச் மாதத்தில் 1,580 கோடி ரூபாய் கணக்குப் புத்தகத்தில் பிழை என, தானே உறுதி செய்த வங்கிக்கு, மேலும் 674 கோடி பிழை ஏற்பட்டதாக கண்டறியப்பட்டது மீண்டும் சிக்கலில் ஆழ்த்தி உள்ளது.
வெளிவந்த பிரச்னை
'விசில்ப்ளோயர்' எனப்படும் லஞ்ச, ஊழல் முறைகேடுக்கு எதிராக குரல் எழுப்பும் நபர்களில் ஒருவர், கடந்த மார்ச் மாதத்தில், ரிசர்வ் வங்கி மற்றும் இண்டஸ்இண்ட் வங்கி இயக்குநர் வாரியத்துக்கு கடிதம் எழுதினார்.
வங்கியின் நிர்வாக இயக்குநர் சுமந்த் கத்பலியாவை மீண்டும் மூன்று ஆண்டுகள் பதவி நீட்டிப்பு செய்ய ரிசர்வ் வங்கிக்கு இயக்குநர் வாரியம் பரிந்துரைத்த வேளை அது.
அதிரடியாக, சுமந்த் பதவியை ஓராண்டு மட்டும் நீட்டித்த ரிசர்வ் வங்கி, சில புகார்கள் மீது விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறியதால், இண்டஸ்இண்ட் வங்கி விவகாரம் அனைவர் கவனத்தையும் ஈர்த்தது.
விசாரணை நீடித்த நிலையில், சில நாட்களிலேயே, தங்கள் அன்னியச் செலாவணி கையாளும் டெரிவேட்டிவ் பதிவுகளில் 1,580 கோடி ரூபாய் பிழை இருப்பதாக, வங்கியின் உள்தணிக்கைக் குழு தெரிவித்தது.
கண்காணிப்பு குழு
தவறு வெளிப்பட்டதால், வங்கியின் பங்குகள் பெரும் வீழ்ச்சியை கண்டன. சில வாரங்களில் 27 சதவீதம் வரை பங்கு விலை சரிந்தது.
சுமந்த் கத்பலியா உட்பட வங்கியின் உயர்நிலை அதிகாரிகள் பலர் தவறுக்கு பொறுப்பேற்பதாகக் கூறி பதவி விலகினர்.
சி.பி.ஐ., ஒரு இடத்தில் ரெய்டு நடத்தினால், பின்னாலேயே அமலாக்கத் துறை வந்து விடுவது போல, ரிசர்வ் வங்கி விசாரணையை அறிந்ததும், செபி தன் தரப்பில் விசாரணையை துவக்கியதும், இண்டஸ்இண்ட் வங்கிப் பங்கு மதிப்பை பதம் பார்த்தது. தன் பங்குக்கு வெளியில் இருந்து ஒரு தணிக்கை குழுவையும் வங்கி நியமித்தது.
எனினும், வாடிக்கையாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என விளக்கிய ரிசர்வ் வங்கி, வங்கியின் அன்றாட வணிகத்தை கண்காணிக்க, நிர்வாக குழு ஒன்றை நியமித்ததால் வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்தனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், தன் உள்தணிக்கை குழு நடத்திய ஆய்வில், குறுந்தொழில் கடன் பிரிவுக்கான கணக்கு பதிவுகளில் 1,269 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்திருப்பதாக, பங்குச் சந்தையிடம் இண்டஸ்இண்ட் வங்கி, கடந்த 15ம் தேதி தகவல் தெரிவித்தது.
குறுங்கடன் கணக்குகளில் 674 கோடி ரூபாயும், மற்ற சொத்துக்கள் என்ற கணக்கில் 595 ரூபாயும் தவறு நேர்ந்திருப்பதாக விளக்கம் அளித்தது.
எவ்வளவு இழப்பு?
அன்னிய கரன்சி டிபாசிட் மற்றும் கடன்களை இந்திய கரன்சிக்கு மாற்றுவதில் நேர்ந்த இழப்பு காரணமாக, வங்கியின் சொத்து மதிப்பு 2.35 சதவீதம் குறையும் என கணக்கிடப்பட்டுள்ளது.
அதாவது, ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 2,100 கோடி ரூபாய் இழப்பு ஏற்படக்கூடும்.
டெரிவேட்டிவ், குறுங்கடன் கணக்குப் புத்தகங்களில் ஏற்பட்ட தவறு என்பது ஒரு முறை நிகழக்கூடிய பாதிப்பு என்றும், அதனால் ஏற்படும் இழப்பை வங்கியால் உள்வாங்கிக் கொள்ள முடியும் என்றும் கூறப்படுகிறது.
அதேபோல, தவறுகளை வெளிப்படையாக அறிவித்ததால், வங்கியின் நற்பெயர், நம்பிக்கையை தக்க வைத்துக்கொள்ள முடிகிறது. அதிகாரிகள் பதவி விலகி, விசாரணைக்கு ஒத்துழைப்பதும் நம்பகத்தன்மையை ஏற்படுத்துகிறது. ரிசர்வ் வங்கி நேரடியாக கண்காணிப்பதால், வங்கி வர்த்தகத்தில் பாதிப்பு நேராது என்பது கூடுதல் பாதுகாப்பு.
முக்கிய அம்சங்கள்
என்ன நடந்தது?: டெரிவேட்டிவ் கணக்கில் 2.35 சதவீத பாதிப்பு ஏற்படுமளவு தவறுகள்.
எப்படி நடந்தது?: உள்வர்த்தகத்தில் தவறான கணக்கீட்டால், கணக்குகளில் தவறான பதிவு.
நிதிசார் பாதிப்பு: கணக்கில் தவறுகளால் 2,100 கோடி ரூபாய் வரை இழப்பு.
அடுத்த நடவடிக்கை: உள் ஆய்வு கைவிடப்பட்டு, வெளிநிறுவன ஆய்வு துவக்கம்.
கடைசி முழு நிதியாண்டு, காலாண்டு நிதிநிலை முடிவுகள் வெளியாகவில்லை
-அசோக் இந்துஜா
புரமோட்டர், இண்டஸ்இண்ட் வங்கி