தம்பதி கொலையில் சிக்கிய மூவர் மண்வெட்டியால் தாக்கியது அம்பலம்

ஈரோடு: சிவகிரி தம்பதி கொலை வழக்கில் சிக்கிய அறச்சலுாரை சேர்ந்த பழைய குற்றவாளிகள் மூவரிடம், கடத்துார் போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

ஈரோடு மாவட்டம், சிவகிரி, மேகரையான் தோட்டத்தில் தனியாக வசித்த முதிய தம்பதி ராமசாமி - பாக்கியம். இவர்கள், ஏப்., 28ல் மர்ம கும்பலால் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். கொலையாளிகளை பிடிக்க, 12 தனிப்படைகள் மற்றும், 600க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபட்டனர்.

அருகில் உள்ள அறச்சலுார் என்ற ஊரை சேர்ந்த பழைய குற்றவாளி ஆச்சியப்பன், 48, என்பவரை போலீசார் விசாரித்தனர். மேலும், தென்னை மரம் ஏறும் தொழிலாளர்களான மாதேஸ்வரன், 53, ரமேஷ், 52, ஆகிய மூவரையும், கடத்துார் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று, தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பல்லடத்தில் நடந்த மூவர் கொலையிலும் இவர்களுக்கு தொடர்பு இருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.

மண்வெட்டியின் மரப்பிடியால் ராமசாமி - பாக்கியம் தம்பதியை தாக்கி கொலை செய்துள்ள இவர்கள், சிறு கத்திகளால் கை, காதுகளை வெட்டி நகைகளை திருடி சென்றதும் தெரிய வந்துள்ளது.

சிவகிரி மேகரையான் தோட்டத்தில், மண்வெட்டி பிடி, சிறு கத்திகளை வீசி சென்றதாக தெரிகிறது. இதை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, பிடிபட்ட மூவரின் ரத்தக்கறை படிந்த சட்டை, மொபைல் போன், சிம் கார்டு உள்ளிட்ட ஆதாரங்களை, அறச்சலுாரில் உள்ள அவர்களது வீடுகளில் போலீசார் தேடி வருகின்றனர்.

10 ஆண்டாக சிக்காத

பழைய குற்றவாளிகள்சிவகிரி தம்பதி கொலையில் சிக்கியுள்ள மூவரும், சென்னிமலை, வெள்ளோடு, அறச்சலுார், கொடுமுடி போலீஸ் ஸ்டேஷன் எல்லை பகுதிகளில் உள்ள வீடுகளில், பணம், நகை, பொருட்களை கொள்ளையடித்து, பலமுறை சிறை சென்றவர்கள். ஆனால் கடந்த, 10 ஆண்டுகளாக எந்த குற்ற வழக்கிலும் சிக்கவில்லை. இவர்கள் மொபைல் போன், கைரேகை, 'சிசிடிவி' கேமரா வைத்து போலீசார் பிடிப்பதை அறிந்து, மொபைல்போன், கைரேகை, கேமரா பதிவுகள் இல்லாத இடங்களாக பார்த்து கொலை, கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர். மூவரும் கொள்ளை அடித்த நகைகளை, சென்னிமலை பகுதி நகை கடைகளில் விற்பனை செய்தோ, அடகு வைத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் சென்னிமலை, வெள்ளோடு பகுதி நகை கடை, நகை அடகு கடை பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

Advertisement