பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ. மழை: ஆரஞ்சு அலர்ட் விடுத்தது வானிலை மையம்!

பெங்களூரு: பெங்களூருவில் பெய்த கனமழைக்கு 3 பேர் பலியாகி உள்ளனர். அங்கு 12 மணிநேரத்தில் 130 மி.மீ., மழை பதிவாகி இருக்கும் நிலையில் ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை மையம் வெளியிட்டு இருக்கிறது.
பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவில் பெய்ய தொடங்கிய மழை, படிப்படியாக வலுத்தது. திங்கட்கிழமை காலை 6 மணி வரை கொட்டி மழையால், அடுக்குமாடி குடியிருப்புகள், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் தேங்கியது.
ஜெயநகர், ஜக்கசந்திரா, கோரமங்கலா உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளக்காடாய் மாறின. மழைநீர், வெள்ளம், மின்விநியோகம் பாதிப்பு என மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
மிக்கோ லே அவுட் பகுதியில் மின்சாரம் தாக்கி 63 வயது முதியவர், 12 வயது சிறுவன் ஆகியோர் உயிரிழந்தனர். வொயிட்பீல்டு பகுதியில் 35 வயது பெண்மணி சுவர் இடிந்து விழுந்ததில் பலியானார்.
மழைக்கு 3 பேர் பலியான நிலையில், ஏராளமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் தத்தளித்தவர்கள் சிறிய வகை படகுகள் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இந்நிலையில், பெங்களூரு நகருக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் வெளியிட்டு இருக்கிறது. பாகல்கோட், பெலகாம், சிக்கல்லபுரா, தார்வாட், கடக், கொப்பல், கோலார், விஜயநகரா பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
இதுகுறித்து பெங்களூரு வானிலை ஆய்வு மைய இயக்குநர் என். புவியரசு கூறியதாவது:
80 மி.மீ, முதல் 100 மி.மீ, வரை மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. கிராமப்புறங்களில் இதுபோன்ற மழையளவு ஒன்றும் இல்லை. ஆனால் பெங்களுரு போன்ற நகர்ப்புறங்களில் நீர்வடிகால் வசதிகள் அடைப்பட்டுள்ளன. எனவே, அதற்கேற்ப தயாராக இருக்க வேண்டும் என்று ஆரஞ்சு எச்சரிக்கையை வெளியிட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வானிலை மைய அறிவிப்பு ஒருபக்கம் இருக்கும் அதே தருணத்தில் மெஜஸ்டிக், ராஜாஜி நகர், மடிவாலா, கேஆர் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டி வருகிறது. மழை ஓய்ந்துவிட்டதாக அனைவரும் எண்ணிய தருணத்தில் தற்போது மீண்டும் பலத்த மழை கொட்டி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக முடங்கி உள்ளது.

மேலும்
-
பகையை துாண்டி பொய்களை பரப்பிய பாக்., தளபதிக்கு பதவி உயர்வு!
-
முன்கூட்டியே துவங்கும் பருவமழை; கேரளாவில் நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுத்தது வானிலை மையம்!
-
காசாவில் குழந்தைகள் இறக்கும் அபாயம்; ஐ.நா., கடும் எச்சரிக்கை
-
பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன பெண் யூடியூபரின் ரகசிய டைரி மீட்பு!
-
தி.மு.க.,விடம் வெளிப்படைத்தன்மை கிடையாது: ஆதவ் அர்ஜூனா
-
வெள்ளைக்குடைக்கு வேலை வந்து விட்டதோ: இ.பி.எஸ்., நையாண்டி