காசாவில் குழந்தைகள் இறக்கும் அபாயம்; ஐ.நா., கடும் எச்சரிக்கை

4

நியூயார்க்: காசா பகுதிக்கு உணவு, மருத்துவ உதவிகள் வழங்காவிடில், அடுத்த 48 மணி நேரத்தில் 14,000 குழந்தைகள் இறக்கக்கூடும் என ஐ.நா. கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.



இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினருக்கு இடையே போர் நடந்து வருகிறது. இதனால் காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 11 வாரங்களாக காசாவுக்குள் செல்லும் அனைத்து உதவிப் பொருட்களையும் இஸ்ரேல் நிறுத்திவைத்தது. தற்போது குறைந்த அளவிலான உதவிப்பொருட்களை காசாவுக்குள் கொண்டு செல்ல மட்டும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அனுமதி அளித்துள்ளார்.




இது தொடர்பாக, ஐ.நா., தலைவர் டாம் பிளெட்சர் கூறியதாவது: காசாவிற்குள் இப்போது அனுமதிக்கப்படும் குறைந்த அளவிலான உதவிகள், உணவின்றி பஞ்சத்தில் தவித்து வரும் பொது மக்களுக்கு போதுமானதாக இருக்காது. தற்போது 5 லாரிகளை மட்டுமே இஸ்ரேல் அனுமதித்துள்ளது.


இந்த சிறிய அளவிலான உதவி கூட இன்னும் தேவைப்படுபவர்களை சென்றடையவில்லை. நாங்கள் அவர்களை அடையவில்லை என்றால், அடுத்த 48 மணி நேரத்தில் 14,000 குழந்தைகள் இறந்துவிடுவார்கள்.


ஊட்டச்சத்து குறைபாடுள்ள தாய்மார்களுக்கும், தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத அவநம்பிக்கையான சூழ்நிலைகளில் உள்ளவர்களுக்கும் உணவைக் கொண்டு செல்வதில் நாங்கள் அனைத்து வகையான சவால்களையும் எதிர்கொள்கிறோம்.


இன்று காசாவிற்கு குழந்தை உணவு மற்றும் ஊட்டச்சத்து பொருட்களை மேலும் 100 லாரிகளில் வழங்க ஐ.நா எதிர்பார்க்கிறது. அடுத்த 48 மணி நேரத்திற்குள் இந்த 14,000 குழந்தைகளில் முடிந்தவரை பலரைக் காப்பாற்ற விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement