ராகுல் புகார் குழந்தைத்தனமானது; முன்னாள் வெளியுறவு செயலர் கண்டிப்பு

54

புதுடில்லி: ''வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதால் தான், பாகிஸ்தான் ராணுவம் உஷாராக இருந்தது என்ற ராகுல் புகார் குழந்தைத்தனமானது,'' என்று முன்னாள் வெளியுறவு செயலர் கன்வல் சிபல் தெரிவித்துள்ளார்.


நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் பேட்டி என்ற பெயரில் வெளியான வீடியோவில், 'ஆபரேஷன் சிந்துார் துவக்க நிலையில், பாக்.,குக்கு ஒரு செய்தியை தெளிவாக சொன்னோம். ராணுவத்தை தாக்கவில்லை.
பயங்கரவாத கட்டமைப்புகளையே தாக்குவோம் என்றும், ராணுவம் தலையிட வேண்டாம் என்றும் கூறினோம். அதை பாக்., ஏற்கவில்லை' என கூறியிருந்தார். இந்த வீடியோவை சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்ட ராகுல், 'தாக்குதலுக்கு முன்பே, பாகிஸ்தானுக்கு தகவல் தெரிவித்தது குற்றம்' என கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் கன்வல் சிபல் வெளியிட்டுள்ள அறிக்கை:
பஹல்காமிற்குப் பிறகு, பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு நினைத்துப் பார்க்க முடியாத பதிலடிகளை கொடுத்தார். சர்ஜிக்கல் தாக்குதல், பாலகோட் தாக்குதலுக்கு பிறகு, இந்தியா பதிலடி கொடுக்கும் என்று பாகிஸ்தானுக்குத் தெரியும். பாகிஸ்தான் ஏற்கனவே தனது திட்டத்தை தயார் செய்து இருக்கும்.



ரபேல் விமானங்கள் இப்போது கையில் இருப்பதால் இந்தியா நிச்சயம் தாக்குதல் நடத்தும் என்று பாகிஸ்தான் அறிந்தே இருக்கும். முன்னெச்சரிக்கையாக திட்டம் தீட்டி இருக்கும்.ஜெய்சங்கர் கூறியதால் தான் பாகிஸ்தான் தனது ராணுவத்தை தயார் செய்தது என்று கூறுவது குழந்தைத்தனமானது. பாகிஸ்தானின் முக்கிய விமானத் தளங்கள் இந்திய பாதுகாப்பு படையினரால் துல்லியமாக தாக்கப்பட்டன. இது ஒரு அற்புதமான சாதனை.



முரிட்கே மற்றும் பஹாவல்பூரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கியது உண்மையிலேயே குறிப்பிடத்தக்க விஷயமாகும். இந்தியாவின் வெற்றியில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, இந்திய இழப்புகளை சொல்ல வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக்கொள்ள முடியாது. சொந்த நாட்டையே பணயம் வைத்து பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் அரசியல் செய்ய விரும்புகிறார்.

நமது சொந்த வெற்றியை மறைத்து நமக்கு எதிராக செயல்படும் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிப்பதா? இவ்வாறு ராகுலுக்கு முன்னாள் வெளியுறவு செயலர் கன்வால் சிபல் கேள்வி எழுப்பி உள்ளார்.

Advertisement