சாதாரண புண் என்று அலட்சியமாக இருந்தால் நாளை கால்கள் இருக்காது சர்க்கரை நோயாளிகளுக்கு எச்சரிக்கை

கோவை; சர்க்கரை பாதிப்பு உள்ளவர்கள் பாதங்களை, கட்டாயம் தொடர்ந்து கவனிக்க வேண்டும். கால்களுக்கு செல்லும் ரத்த குழாய் அடைப்பு மற்றும் நரம்பு உணர்வு திறன் இல்லாமையால், பலருக்கு சாதாரணமாக ஏற்படும் புண், கால்களை இழக்கும் நிலைக்கு தள்ளிவிடுவதாக, டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

தேசிய சுகாதார திட்ட புள்ளிவிபரங்களின் படி, இந்தியாவில் சுமார், 10 கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில், 25 சதவீதம் பேர் பாத பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். பாதிப்புக்கு ஆளாவதில், 85 சதவீதம் பேர் கால்களை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதன் அடிப்படையில், தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், பாதம் காப்போம் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

அரசு மருத்துவமனை நீரிழிவு நோய் பிரிவு தலைவர் டாக்டர் வெண்கோ ஜெயபிரசாத் கூறியதாவது:

சர்க்கரை இருப்பவர்களுக்கு, கால்களுக்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுகிறது. நரம்புகளில் உணர்வு திறன் இருக்காது. புண் ஏற்பட்டு அவை பெரிதாகும் வரை, அவர்களுக்கு அதை பற்றி தெரியாது. புண் பெரிதாகி கிருமி தொற்று உடல் உறுப்புகளை பாதிக்கும். சில நேரங்களில் உயிருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. பலர் கால்களை இழக்கும் நிலை ஏற்படுகிறது.

பாதம் காப்போம் திட்டம் வாயிலாக, ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை நர்சுகள், டாக்டர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. சர்க்கரை பாதிக்கப்பட்டவர்களின் பாதங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, புண்கள் இருப்பின் உடனடியாக சிகிச்சை அளிக்கப்படும்.

அறுவைசிகிச்சை தேவைப்படின், அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படும். இதுபோன்ற அறுவை சிகிச்சைக்கு, ரத்தக்குழாய், நரம்பியல், சர்க்கரை நோய் நிபுணர் போன்ற ஒருங்கிணைந்த மருத்துவ குழு இருப்பது அவசியம்.

கோவை அரசு மருத்துவமனையில், இச்சிறப்பு குழு உள்ளது. சர்க்கரை பாதிப்பு உள்ளவர்கள் கால்களை தொடர்ந்து கண்காணித்து, பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். சிறிய புண் ஏற்பட்டாலும், உடனடியாக டாக்டர்களை அணுகி, சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

'பாத பரிசோதனை நடக்கிறது'

மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் சுமதி கூறுகையில், ''பாதம் காப்போம் திட்டம் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி மருத்துவமனைகளில் செயல்படுத்தி வருகிறோம். இதன் வாயிலாக, சர்க்கரை பாதிப்பு உள்ள அனைவருக்கும், பாதம் கண்காணிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், சர்க்கரை நோய்க்கு மருந்து பெறுபவர்களுக்கு, பாதம் பரிசோதனையும் செய்யப்படுகிறது. ஆரம்ப நிலையில், கண்டறிந்தால் கால்களை இழக்கும் நிலையை தவிர்க முடியும், '' என்றார்.

Advertisement