'பாக்ஸ்கான்' ரூ.12,800 கோடி முதலீடு? உறுதியானதும் அறிவிக்கப்படும்: ராஜா

சென்னை:காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் சுங்குவார்சத்திரத்தில், தைவான் நாட்டைச் சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனத்தின் தொழிற்சாலை உள்ளது.

இங்கு அமெரிக்காவைச் சேர்ந்த, 'ஆப்பிள்' நிறுவனத்தின் ஐபோன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவை, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்நிறுவனம், 1,792 கோடி ரூபாய் முதலீட்டில் ஸ்ரீபெரும்புதுார் ஆலையை விரிவாக்கம் செய்ய, சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு, கடந்த நவம்பரில் விண்ணப்பம் செய்தது. இதனால், 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது.

தற்போது, ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக, கடந்த ஐந்து தினங்களில் மட்டும், தமிழகத்தில் பாக்ஸ்கான் நிறுவனம் கூடுதலாக, 12,800 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.

அதேசமயம், இதுதொடர்பாக தமிழக அரசிடம் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாமல் உள்ளது.

இதுதொடர்பாக, தொழில் துறை அமைச்சர் ராஜா விடுத்த அறிக்கையில், 'பாக்ஸ்கான் பற்றி விரைவில் சில நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம்.

'ஆனால், தயவு செய்து தற்போது வெளியாகும் தகவல் உறுதிப்படுத்தப்பட்டவை அல்ல. விஷயங்கள் உறுதி செய்யப்பட்ட உடன் அறிவிப்போம்' என, தெரிவித்துள்ளார்.

Advertisement