நிடி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்பாரா?: மாநில வளர்ச்சிக்கு டில்லி பயணம் அவசியம் அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்
புதுச்சேரி : பிரதமர் மோடி தலைமையில் வரும் 24ம் தேதி நடைபெறும் நிடி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்க வேண்டும் என, அரசியல் கட்சிகள் வலியுறுத்தி உள்ளனர்.
மத்திய அரசு கடந்த 1950ம் ஆண்டு மத்திய திட்டக்குழுவை உருவாக்கியது. இக்குழு ஆண்டுதோறும் கூடி, அந்தாண்டில் செயல்படுத்த வேண்டிய திட்டங்களை முடிவு செய்து வந்தது.
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., ஆட்சி பொறுப்பேற்ற பின் மத்திய திட்டக்குழுவை கலைத்தது.
மாற்றாக கடந்த 2015ம் ஆண்டு நிடி ஆயோக் என்ற அமைப்பை ஏற்படுத்தியது. இந்த அமைப்பின் தலைவராக பிரதமர் மோடியும், உறுப்பினர்களாக மாநில முதல்வர்கள் அல்லது நிதித்துறை பொறுப்பு வகிக்கும் அமைச்சர்கள் உள்ளனர்.
கடந்தாண்டு ஜூலை மாதம் பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில், புதுச்சேரி சார்பில் நிதித்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி பங்கேற்காமல், அமைச்சர் லட்சுமிநாராயணன் பங்கேற்றார். கூட்டத்தில் முதல்வர் பங்கேற்காதது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது.
தற்போது, முதல்வர் ரங்கசாமி மாநில அந்தஸ்தை தீவிரமாக வலியுறுத்தி வருகிறார். மேலும், புதுச்சேரியை மத்திய நிதிக்குழுவில் சேர்க்க வேண்டும். கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என, மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில் வரும் 24ம் தேதி இந்த ஆண்டிற்கான நிடி ஆயோக் கூட்டம், டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில், புதுச்சேரி சார்பில், முதல்வர் பங்கேற்று, பிரதமரிடம் மாநில பிரச்னைகளை எடுத்துக்கூறினால், அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என, பல்வேறு அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
நாராயணசாமி, முன்னாள் முதல்வர்: பிரதமர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் முதல்வர் பங்கேற்று, மாநில பிரச்னைகளை எடுத்து கூறினால், மாநிலத்திற்கு தேவையான நிதி கிடைக்கவும், மாநில அந்தஸ்து பெறவும், புதுச்சேரியை நிதிக்குழுவில் சேர்க்க வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். எனவே இக்கூட்டத்தி்ல முதல்வர் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.
செல்வகணபதி, பா.ஜ., மாநில தலைவர்: புதுச்சேரியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு நிடி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்பார் என கருதுகிறேன்.
சிவா, எதிர்க்கட்சி தலைவர்: பா.ஜ., கூட்டணியில் உள்ள முதல்வர் ரங்கசாமி, பிரதமர் தலைமையில் நடைபெறும் நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றால், அவரது நீண்டகால கோரிக்கையைான மாநில அந்தஸ்து பெற வாய்ப்பாக இருக்கும்.
மேலும், நிதிக்குழுவில் புதுச்சேரியை சேர்க்கவும், கடனை தள்ளுபடி செய்ய அறிய வாய்ப்பாக இருக்கும். அவர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றால், புதுச்சேரிக்கு அவர் செய்யும் மிகப்பெரிய அநீதியாகும்.
அன்பழகன், அ.தி.மு.க., மாநில செயலாளர்: மாநில வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்த பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிடி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்க வேண்டும். இதன் மூலம், மாநிலத்தின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற வாய்ப்பு ஏற்படும். எனவே, முதல்வர் இந்த வாய்ப்பை தவறவிடக்கூடாது.
ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும், மாநில வளர்ச்சியை கருத்தில் கொண்டு, நிடி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்துயுள்ளன. இருப்பினும், முதல்வர் டில்லி செல்வாரா என்பது மர்மமாகவே உள்ளது.
மேலும்
-
கத்திரி வெயிலில் காவிரியில் வெள்ளம்
-
கொலம்பியா விமானங்களுக்கு வெனிசுலாவில் அதிரடி தடை
-
தொழிலாளர்களுக்கான 44 சட்டங்களை நான்காக சுருக்கிய மத்திய அரசு : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
-
மழையால் பயிர் சேதம் : இழப்பீடு தர கோரிக்கை
-
திருநள்ளாறு - பேரளம் அகல பாதையில் மின்சார ரயில் சோதனை ஓட்டம்
-
மதுரை பா.ஜ., நிர்வாகி சாவு: போலீசார் விசாரணை